×

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அணைகள், நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இருப்பு உள்ளது: நகராட்சி அதிகாரிகள் தகவல்

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அணைகள், நீர்த்தேக்கங்களில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 90  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில மக்களின் குடிநீர் வசதிக்காக  பார்சன்ஸ்வேலி, டைகர் ஹில், மார்லிமந்து  உள்ளிட்ட அணைகளில் இருந்தும், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ்  தொட்டபெட்டா, மேல்  கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, கிளன்ராக், ஓல்டு ஊட்டி  ஆகிய நீர் தேக்கங்களில் இருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு  வருகிறது. இதில்  பிரதான நீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு ஊட்டியில் உள்ள மக்களின் தண்ணீர் தேவை  பூர்த்தி  செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த  கனமழையால் குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகள், நீர்நிலைகள், மின் உற்பத்திக்கு  ஆதாரமான  அணைகள் முழுமையாக நிரம்பின. இதன் காரணமாக இந்த ஆண்டு கோடை  காலத்தில் பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை.  நடப்பு  ஆண்டில் ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமானது.  இருப்பினும் அணைகளில் போதுமான தண்ணீர் இருந்ததால்  குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படவில்லை. நாள்தோறும் பயன்படுத்தியதால் அணைகளில் நீர் இருப்பு  குறைந்தது.  ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கி 10  நாட்கள் ஊட்டி  உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம்  உயர்ந்தது. ஊட்டி நகராட்சியின் குடிநீர்  ஆதாரமாக உள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் நிரம்ப துவங்கின. தொடர்ந்து மழை குறைந்த நிலையில் அணைகளில்  நீர்மட்டம் உயரவில்லை.

தற்போது ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும்  அணைகளில் அடுத்த சில மாதங்களுக்கு குடிநீர் விநியோகிக்க போதுமான அளவு  தண்ணீர் இருப்பு  உள்ளது. அதற்குள் நல்ல மழை பெய்யும் பட்சத்தில் அணைகளில்  நீர்மட்டம் உயர்ந்து அடுத்த ஆண்டு துவக்கம் மற்றும் கோடை காலத்தில்  குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : reservoirs ,Ooty ,Municipal ,Ooty Municipal Corporation , Ooty, Municipal ,Corporation,officials, informed
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்