பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பணிக்காக மூடப்பட்ட டவுன் குற்றால ரோடு ஒரு வழிப்பாதையாக திறப்பு : விரைந்து பணிகளை முடிக்க வலியுறுத்தல்

நெல்லை: பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக மூடப்பட்ட டவுன் குற்றால ரோடு, தினகரன் செய்தி எதிரொலியாக ஒரு  வழிப்பாதையாக திறக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நெல்லை மாநகர பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும்  பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக டவுன் வழுக்கோடை சந்திப்பில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலான குற்றால ரோட்டில்  குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றால ரோட்டில் இருந்து வடக்கு, தெற்காக செல்லும் தெருக்களில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் குடிநீர்  குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே தொண்டர் சன்னதி பகுதியில் இருந்து பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக  வழுக்கோடை சந்திப்பில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு  உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தெருக்களில் இருந்தும் மக்கள் அவசர தேவைக்கு இருசக்கர வாகனங்களில் வெளியே வர முடியாத  சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமத்திற்குள்ளாயினர். இதுகுறித்து நேற்று தினகரனில் படத்துடன் செய்தி  வெளியானது.

இதன் எதிரோலியாக மாநகராட்சி அதிகாரிகள், நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குற்றால ரோடு மற்றும் அதனை ஒட்டியுள்ள  தெருக்களில் வசிக்கும் மக்கள் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்லும் வகையில் குற்றால ரோட்டை ஒரு வழிப்பாதையாக  போக்குவரத்துக்கு திறந்து விட்டனர். இதற்காக வழுக்கோடை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில்  மாற்றி அமைக்கப்பட்டன.குற்றால ரோட்டில் இருந்து வடக்கு, தெற்காக பிரியும் தெருக்களில் உள்ள மக்கள், வழுக்கோடை சந்திப்பை அடைந்து கண்டியப்பேரி, ராமையன்பட்டி,  தச்சநல்லூர் வழியாக டவுன், சந்திப்பு பகுதிக்கு செல்லலாம். தினகரன் செய்தி எதிரொலியாக நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு  அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

வருகிற 7ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயங்குமென அறிவிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து அதிகமாகும். குற்றால  ரோடு மூடப்பட்டு உள்ளதால் பேட்டை, பழையபேட்டை சாலை வழியாக டவுனுக்கு வருபவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் மாநகர பகுதிக்குள் வர  முடியாத சூழல் ஏற்படும். எனவே விரைந்து பணிகளை முடித்து போக்குவரத்துக்கு குற்றால ரோட்டை திறக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும்  வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>