×

தன் கால் பாசனம் தடைபட்டதால் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் குளங்கள்: 300 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்

களக்காடு: களக்காடு அருகே பச்சையாறு அணை கட்டுமானத்தின் போது தன் கால் பாசனம் தடைபட்டதால் 2 குளங்கள் தண்ணீர் இன்றி  வறண்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் நிலவுகிறது.நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழவடகரையில் பூலாங்குளம், பம்பன்குளம் ஆகிய 2 குளங்கள் உள்ளன. இந்த குளங்களின் மூலம்  அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முன் காலத்தில் இந்த குளங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில்  இருந்து வரும் தன் கால் பாசனம் மூலம் தண்ணீர் வருவது வழக்கம். மழை பெய்தவுடன் தன் கால் மூலம் தண்ணீர் வந்து குளம் நிரம்பி விடும்  என்பதால் விவசாயிகள் கவலை இன்றி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் களக்காடு பச்சையாறு அணை கட்டப்பட்டத்தில் இருந்தே இந்த குளங்கள் நிரம்புவது கேள்விக்குறியாகி விட்டது என்று விவசாயிகள் புகார்  தெரிவிக்கின்றனர். இந்த குளங்களுக்கு வரும் தன் கால் அணையின் உள்பகுதியில் சென்று விட்டதே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால்  குளங்களுக்கு தண்ணீர் வரும் தன் கால் பாசனம் தடைபட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் தான் குளங்கள் நிரம்பும் சூழல்  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டது. அதன் பின் தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்காததால் குளங்கள்  நிரம்பவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்தது. இந்த மழையினால் களக்காடு பகுதியில் உள்ள  குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. பருவம் தவறி பெய்தாலும் சாரல் மழையினால் வறண்டு கிடந்த குளங்கள் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பி  காட்சி அளிக்கிறது. ஆனால் பூலாங்குளம், பம்பன்குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரத்து இல்லை.   இந்த குளங்களின் தண்ணீரை நம்பி விளை  நிலங்களில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர். தற்போது குளங்களில் தண்ணீர் இல்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத  நிலை எழுந்துள்ளது. தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே கருகும் பயிர்களை  காப்பாற்ற களக்காடு பச்சையாறு அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் அலட்சியம்
வடகரையை சேர்ந்த விவசாயி பாலன் கூறுகையில், ‘இந்த குளங்களுக்கு தண்ணீர் வந்த தன் கால் பாசன கால்வாய் அணைக்குள் சென்று விட்டதால்  பூலாங்குளம், பம்பன்குளங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டும். பச்சையாறு அணையில் 15 அடிக்கு தண்ணீர்  தேங்கியுள்ளது. ஆனால் பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அணை பாசன  திட்டத்தில் இடம்பெறாத குளங்களுக்கு தண்ணீர் திறக்கும் அதிகாரிகள், அணையின் அருகில் பாசன திட்டத்தில் இடம் பெற்ற குளங்களுக்கு அலட்சிய  போக்கில் தண்ணீர் திறக்க மறுப்பதின் மர்மம் என்ன? என்பது தெரியவில்லை” என்றார்.

மானாவாரி தண்ணீரும் பறிபோனது
களக்காடு ஒன்றிய இந்திய கம்யூ. பொறுப்பாளர் முருகன் கூறுகையில், ‘இந்த 2 குளங்களுக்கும் தன் கால் மூலம் தண்ணீர் வரும், அது தவிர அப்பகுதி  மலையடிவாரத்தில் இருந்து மழை பெய்யும் போது மானாவாரி தண்ணீரும் வரும். தற்போது குளங்களுக்கு தண்ணீர் வந்த தன் கால் அணைக்குள்  சென்று விட்டது. அதுபோல மானாவாரி தண்ணீர் வரும் வழியில் அணையின் கால்வாய் அமைக்கப்பட்டதால் அந்த தண்ணீரும் பறிபோய் விட்டது.  எனவே அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி குளங்கள் நிரம்ப நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்” என்றார்.



Tags : drought , Because ,foot ,irrigation ,blocked, Dry,ponds ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!