குளத்தூர் அருகே தரமற்ற நிலையில் புதிய தார்சாலை: ஆய்வு செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

குளத்தூர்: குளத்தூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை தரமற்று உள்ளது என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து கலைஞானபுரம் வழியாக துலுக்கன்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை  2 கி.மீட்டர் தூரம்  உள்ளது. இக்கிராமச்சாலை கற்கள் பெயர்ந்து பழுதடைந்து பலவருடங்களாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அப்பகுதி  பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக சாலை அமைக்க விளாத்திகுளம் யூனியன் மூலம் ரூ. 61.77 லட்சம் மதிப்பில் தருவைகுளம் சூரன்குடி  சாலை முதல் துலுக்கன்குளம் கலைஞானபுரம் சாலை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் தீர்மானம் நிறைவேற்றப்ட்டு சாலை பணிக்கான டெண்டர்  விடப்பட்டு சாலை பணிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக முடிக்கப்பட்டது. ஆனால் சாலை போடப்பட்ட மறுநாளே வாகனங்கள் செல்லும்பொழுது  சாலை பெயர்ந்ததால் தரமற்ற சாலையாக போடப்பட்டுள்ளது என  அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், முக்கிய  போக்குவரத்துக்கு பயன்படுத்தும்  இச்சாலை நீண்டகாலமாக பராமரிப்பின்றி குண்டும்  குழியுமாக இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலரிடம் மனு அளித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிய  சாலை அமைக்கும் பணிகளை துவக்கினர். சாலை அமைக்கப்படுவதால் இப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் சாலை தரமற்று காணப்படுவதால்   போடப்பட்ட மறுநாளே பெயர்ந்தது. தரமற்று பெயரளவுக்கே சாலை போடப்பட்டுள்ளது.  வரும் மழைகாலத்தில் இச்சாலை ஜல்லி  பெயர்ந்து  சிதிலமடைந்து விடும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>