×

புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகள் கண் முன் தீக்குளித்த விவசாயி: காரிமங்கலம் அருகே பரபரப்பு

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த விவசாய ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற முயன்றதால், அதிகாரிகள் கண்  முன்பே விவசாயி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கிட்டேசம்பட்டி பகுதியில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மேய்ச்சல்  நிலம் உள்ளது. இதில் சில ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதே பகுதியைச் சேர்ந்த கணபதி மகன்கள் கோவிந்தசாமி, சின்னசாமி, மாயக்கண்ணன்,  தேவராஜ் ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைப்பது தொடர்பாக,  பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, பாலக்கோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,  புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற முடிவு செய்த அதிகாரிகள், நேற்று அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்.

 இதையொட்டி, காரிமங்கலம் தாசில்தார் கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் தாரணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், போலீசாருடன்  பொக்லைன், டிராக்டர் போன்றவற்றுடன், சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம்  செய்து வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், விவசாயி சின்னசாமி(65)  என்பவர், திடீரென அதிகாரிகள் கண் முன்பே, தனது உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி  அடைந்த அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்தனர். பின்னர், பலத்த தீக்காயங்களுடன் அலறி துடித்த சின்னசாமியை, தர்மபுரி அரசு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு டிஎஸ்பி சீனிவாசன், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் போலீசார் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு  சென்றனர். விவசாயி தீக்குளித்ததால் பதற்றமான அதிகாரிகளை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Karimangalam ,opposition officials ,land ,riot ,protestors , Farmer, protestors ,remove ,encroachment ,outlying, Karimangalam
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்