×

திருவண்ணாமலை பகுதிகளில் சாலையோரம் வீசப்பட்ட சாமந்தி பூக்கள்: விலை வீழ்ச்சியிலும் விற்பனையின்றி பரிதாபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சாமந்தி பூக்களின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனை குறைவால் சாலையோரம் வீசும் அவல நிலை  ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலையின் சுற்றுவட்டார பகுதிகளில், மலர் சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக, கொளக்குடி, வாளவெட்டி, சேர்ப்பாப்பட்டு,  கூடலூர், காஞ்சி, கடலாடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லி, முல்லை, சாமந்தி அதிகம் சாகுபடியாகிறது.இந்நிலையில், ஊரடங்கு அறிவித்த பிறகு பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விற்பனைக்கான வாய்ப்பு குறைந்ததால், விலை  கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. திருமணங்கள், கோயில் விழாக்கள் போன்றவை விமரிசையாக நடைபெறுவதில்லை.

மேலும், திருவண்ணாமலையில் பூ மார்க்கெட் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, புதிய பைபாஸ் சாலை ஏந்தல் பகுதியில்  தற்காலிக பூ மார்க்கெட் செயல்படுகிறது. அங்கு, போதுமான இட வசதியில்லை. திறந்தவெளி பகுதி என்பதால், பூக்களை பாதுகாக்க  இடமில்லை.இந்நிலையில், திருவண்ணாமலை பகுதியில் சாமந்தி பூ அதிக அளவில் சாகுபடியாகியிருக்கிறது. எனவே, விலை கடுமையாக வீழ்ச்சி  அடைந்திருக்கிறது. ஒரு கிலோ ₹150 வரை மட்டுமே விற்பனையாகிறது. மேலும், மல்லி, முல்லை, போன்றவை ஓரளவு விற்பனையாகிறது. ஆனால், சாமந்தி, சம்பங்கி  போன்றவை தேங்கியிருக்கிறது. வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து ெதாடங்காததால், அவற்றை பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கவும் முடியவில்லை.

எனவே, ஏந்தல் பகுதியில் தற்காலிக பூ மார்க்கெட் அருகே சாலையோரங்களில், குவியல் குவியலாக சாமந்தி பூக்களை வியாபாரிகள் கொட்டிவிட்டு  செல்கின்றனர். கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு, பூக்களின் தேவை அதிகரிக்கும் நிலை ஏற்படும்போது தான் மீண்டும் பூக்கள் விலை நியாயமான அளவில் உயரும்  என விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவித்தனர்.

Tags : areas ,Thiruvannamalai , Marigolds , roadside, Thiruvannamalai,despite ,falling ,prices
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...