×

சேலம் கலெக்டர் ஆபீஸ் அருகே காய்கறிகளை சாலையில் கொட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் கதறல்: குத்தகைதாரர் 50 ஆயிரம் கேட்டு மிரட்டுவதாக புகார்

சேலம்: சேலத்தில் குத்தகைதாரர் முன்பணமாக 50 ஆயிரம் கேட்பதால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மற்றும் வியாபாரிகள் கலெக்டர் ஆபீஸ் அருகே  காய்கறிகளை சாலையில் கொட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.சேலம் ஆனந்தா பாலம் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்த சாலையோர பெண் வியாபாரிகள் 70க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கலெக்டர்  அலுவலகம் அருகே வந்தனர். திடீரென அவர்கள் கொண்டு வந்திருந்த காய்கறிகளை ரோட்டில் கொட்டி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் சாலையில் அமர்ந்து பெண் வியாபாரிகள் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆனந்தாபாலம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது இப்பகுதியை  குத்தகைக்கு எடுத்தவர், நாங்கள் கடை போட வேண்டும் என்றால் முன் பணமாக ₹50 ஆயிரம் தரவேண்டும், சுங்க வரியாக தினமும் 60 ரூபாய்  தரவேண்டும் என டார்ச்சர் செய்து வருகிறார். 50 ஆயிரம் ரூபாய்க்கு நாங்கள் எங்கே போவோம். பணம் கொடுக்க முடியவில்லை என்றால், இங்கு  காய்கறி கடை போடக்கூடாது என அடித்து விரட்டுகின்றனர்.

கடந்த 3 நாட்களாக கடை போடாததால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் அழுகி விட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம்.  ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், எங்களை கெட்ட வார்தையால் பேசி காவல்துறையை வைத்து மிரட்டி வியாபாரம் செய்ய விடாமல்  தடுக்கிறார்கள். எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் ,கடை வைத்துக்கொள்ள  அனுமதியும் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததால் பரபரப்பான சூழல் நிலவியது. இது குறித்து தகவலறிந்த உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும்  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.


Tags : Women ,road ,office ,Tenant ,Salem Collector ,Office Robbery ,Rs , Poured ,vegetables ,Collector, Office, Complaint ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...