×

ஆன்லைனில் படிக்க முடியாத மாணவர்களை தேடிச் சென்று பாடம் நடத்தும் தென்றல் டீச்சர் : பெற்றோர்கள் வரவேற்பு

காரைக்குடி: ஆன்லைன் மூலம் படிக்க முடியாத மாணவர்களை தேடிச் சென்று ஆசிரியை பாடம் கற்பித்து வருவது காரைக்குடி பகுதியில் பெற்றோர்  இடையே வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்  வகுப்பு எடுத்து வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாத நிலையே தொடர்கிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கார்த்திகேயன் அரசு உதவி பெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர் தென்றல், வாட்ஸ் அப் மூலம் தங்களது பள்ளி  மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். ஆனால், ஆன்ட்ராய்டு போன் இல்லாத மாணவர்கள் படிக்க முடியவில்லை என கவலை தெரிவித்தனர்.  இதையடுத்து ஆசிரியை ஒவ்வொரு பகுதியாக சென்று அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுத்து வருகிறார். இவரது  முயற்சிக்கு பெற்ேறார்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியை தென்றல் கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கு நேரடியாக சொல்லி கொடுக்கும்போதுதான் அவர்களின் கற்றல் திறன் மேம்படும். ஆன்ட்ராய்டு  போன், இன்டர்நெட் வசதி இல்லாத காரணத்தால் பலர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க மாணவர்கள் இருக்கும் இடத்தை தேடி  செல்ல முடிவு செய்தேன். எனது கணவர் சரவணன் ஊக்குவித்தார். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போன் செய்து வருவதாக கூறிவிடுவேன். அவர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து மாணவர்களையும்  தயார் செய்து வைத்திருப்பார்கள். 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சொல்லி கொடுக்கிறேன். குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். பிறகு பாடம் கற்பிக்க வேண்டும்.  இந்த அடிப்படையில் விளையாட்டு மற்றும் கதை சொல்லி பாடம் நடத்தி வருகிறேன்’’ என்றார்.



Tags : Breeze Teacher ,Parents ,teacher , search ,students,online,lesson , Parents ,Welcome
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...