×

கூடலூரில் யானை சுட்டுக்கொலையா?: தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை

கூடலூர்:  கூடலூர் அருகே இறந்த ஆண் யானை வேட்டைக்காரர்களால் சுடப்பட்டதா? என்பதை கண்டறிய வனத்துறை சார்பில் தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலியம்பாறையில் வாச்ச கொல்லி பீட்  வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை  ஒரு யானைக் கூட்டம் நின்றது. அங்கு சுமார் 40 வயதான ஆண் யானை இறந்து கிடந்ததை வனத்துறையினர் பார்த்தனர். கூடலூர் கோட்ட வன அலுவலர் முன்னிலையில்  வனத்துறையினர் நேற்று முன்தினம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். வயது மூப்பு காரணமாகவும், போதிய உணவு உண்ணாத  காரணத்தாலும் யானை இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் யானையின் வலது பின்னங்கால் முட்டி பகுதியில் ஏற்பட்ட காயம் ஒன்றில் சீழ் வடிவதை  பிரேத பரிசோதனையின்போது  பார்த்துள்ளனர். காயத்தை அறுத்து பரிசோதித்தபோது, காயத்தின் உள்ளே தோட்டா போன்ற ஒரு பொருள் இருந்ததாக தெரிகிறது. அதுபற்றி சோதனை  செய்வதற்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கூடலூர் கோட்ட வனஅலுவலர் சுமேஷ் சோமன் கூறுகையில், ‘‘யானையின் உடற்கூறு ஆய்வின்போது, காலில் உள்ள புண்ணை ஆய்வு  செய்த போது ஒரு இன்ச் விட்டம் உள்ள கருப்பு நிற வட்டமான பொருள் ஒன்றும், நசுங்கிய நிலையில் இரும்பு தகடு இரண்டும் கிடைத்துள்ளது.  யானையின் காலில் புண் ஏற்பட்டு சுமார் 2 மாதங்கள் இருக்கலாம்.

இந்த புண் காரணமாக யானை இறந்திருக்குமா? இறந்த யானையுடன் வந்த யானை கூட்டம் எங்கிருந்து இப்பகுதிக்கு வந்தது? என்பது குறித்து ஆய்வு  செய்யப்படுகிறது.  கேரள வன பகுதிகளில் இருந்தும் யானைகள் இப்பகுதிக்கு வந்து இருக்கலாம். எனவே இது குறித்து மலப்புரம் மாவட்ட  வனத்துறையினர் மற்றும் காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளோம்.  சம்பந்தப்பட்ட பொருள் துப்பாக்கி தோட்டாவாக இருந்தால், அது எந்த  வகையான துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறும். இதற்காக கூடலூர் உதவி வனப்பாதுகாவலர்  விஜயன் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என தெரிவித்தார்.

Tags : investigation ,Elephant shooting ,Forest Department ,Cuddalore ,Personnel , Elephant ,shooting ,Cuddalore ,investigation
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்