×

டிக்கெட் வாங்கியிருக்கேன்... பஸ்சுல போக முடியாது: ஒரே ஒரு பயணியுடன் சென்ற ரயில்: வேறுவழியின்றி மாணவியின் கோரிக்கை ஏற்பு

ராஞ்சி: டெல்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில், ராஞ்சி நகருக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்ட விரைவு ரயில், டால்டோன்கஞ்ச் பகுதியில் நடந்த போராட்டம் காரணமாக ரயில் தொடர்ந்து இயங்க முடியாமல் பாதி வழியில் நின்றது. ரயிலில் இருந்த 930 பயணிகளும் பேருந்து மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ஒரே ஒரு பெண் பயணி அனன்யா என்பவர், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த மாற்று பேருந்து போக்குவரத்தை ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் தான் ரயிலிலேயே செல்வேன் என்றும் திட்டவட்டமாக கூறினார்.மேலும், ரயில் பயணத்துக்குக் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும், பேருந்தில் பயணிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனால், ரயில் அதிகாரிகள் வேறுவழியில்லாமல் சட்டக் கல்லூரி மாணவி அனன்யாவை, ரயிலில் கோமோ மற்றும் பொகாரோ வழியாக 535 கிலோ மீட்டர் பயணித்து ராஞ்சிக்கு அழைத்து சென்றனர். வழக்கமான பாதையை விட 225 கி.மீ. தூரம் ரயில் சுற்றி வந்து 15 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்துள்ளது. இதுகுறித்து அனன்யா கூறுகையில், ‘என்னை பேருந்து அல்லது கார் மூலம் ராஞ்சி செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். நான் ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன். பேருந்தில் செல்ல விரும்பவில்லை. இதுபற்றி இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்தேன். இதையடுத்து நான் ராஞ்சிக்கு ரயிலில் வந்தடைந்தேன்’ என்றார்.


Tags : passenger ,student , Ticket, bus, train, student
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...