நீலாங்கரையில் பரபரப்பு: காதலியின் புதிய காதலனை கொலை செய்ய கத்தியுடன் திரிந்த 4 பேர் கைது

நீலாங்கரை: சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் போலீசாரை கண்டதும் திரும்பி சென்றது. போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர். இதனையடுத்து, காயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். விசாரணையில், அவர்களிடம் பட்டாக்கத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, 2 பேரையும் காவல்நிலையம் கொண்டு வந்து இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தபோது, பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த வெங்கடேசன் (21), திருவான்மியூர் குப்பத்தை சேர்ந்த சூர்யா (19) என்பது தெரியவந்தது.

இவர்களை பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த வினோத் (22) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ்(19) ஆகியோர் அக்கரை பகுதியில் உள்ள ஒருவரை கொலை செய்ய அனுப்பியதாக தெரிவித்தனர். உடனடியாக வினோத், முகேஷை பிடித்தனர். வினோத்திடம் விசாரித்தபோது, ‘ நானும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக அந்த பெண் என்னை கழுற்றிவிட்டு நைனார்குப்பத்தை சேர்ந்த வெற்றி என்பவரை காதலிக்க தொடங்கினார். பல முறை என் காதலியை விட்டுவிடுமாறு வெற்றியிடம் கூறினேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். காதலியை பிரிய முடியாததால் வெற்றியை கொலை செய்ய முடிவு செய்து நண்பர்களை அனுப்பினேன்’ என கூறியுள்ளார்.

இதையடுத்து வினோத், அவனது நண்பர்கள் வெங்கடேசன், சூர்யா, முகேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் முகேஷ் சென்னையில் உள்ள அரசு தொழிற்கல்வி நிலையத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>