×

கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது, என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149வது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர் வ.உ.சிதம்பரனார். டி.என்.பி.எஸ் குரூப்-4 கலந்தாய்வுக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்கும். கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம்.

நாங்கள் எம்.ஜி.ஆர் வழி நடப்பவர்கள். இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அரசின் நிர்வாக காரணங்களால் தான் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பாஜகவின் அழுத்தம் காரணமாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறுவது தவறு. எந்த அழுத்தமும் தங்களை நிர்பந்திக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜயை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.என பதிலளித்தார்.

Tags : Jayakumar ,ministers ,L. Murugan ,interview , Coalition, BJP, L. Murugan, AIADMK, Minister Jayakumar
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...