ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு : ஆசிரியர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து!!

சென்னை : ஆசிரியர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது கவிதை பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: நல்ல ஆசிரியர்களால், சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித்தர முடியும். ஆசிரியரின் மனதுருக்கம், அறியும் தன்மை மற்றும் ஊக்கமளித்தலே வகுப்பிலுள்ள ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. சிறந்த ஆசிரியர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  நாட்டின் வருங்கால தூண்களான மாணவ செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு இந்நன்னாளில் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது பாணியில் கவிதை வாயிலாக ஆசிரியர் தின வாழ்த்து செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பின்வருமாறு..

கல்லூரிப் பேராசிரியர்கள்

எனக்கு உரமிட்டவர்கள்;

பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.

காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்

பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.

அவர்களைப் பார்த்துப்

பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்;

காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.

ஆசிரியர் குலத்திற்கு

என் கனிந்த கைகூப்பு

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>