கேளம்பாக்கம் அருகே இரவு முழுவதும் பொது இடத்தில் குப்பை எரிப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல்: திடக்கழிவு மேலாண் திட்டத்தை நிறுத்தியதால் பாதிப்பு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே, பொது இடத்தில் குப்பை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிறுத்தப்பட்டதால் இந்த பாதிப்பு நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சென்னையை ஒட்டி வளர்ந்து வரும் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய கிராமங்களில் அஜீத்நகர், சொக்கம்மாள் நகர், சீனிவாசா நகர், சண்முகா நகர், குமரன் நகர், சாமுண்டீஸ்வரி நகர், ரேணுகாம்பாள் நகர், சுசீலா நகர், நந்தனார் நகர், கேஎஸ்எஸ் நகர், ஜோதி நகர், மஜீத் நகர் உள்பட 50க்கும் மேற்பட்ட வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன.

இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் இருந்து ஊராட்சி பணி யாளர்கள் மூலம் கழிவு, குப்பை பெறப்பட்டு வந்தன. கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாததால், அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் வளர்ச்சி பணி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கேளம்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த இடம் இல்லாததாலும், போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததாலும் இத்திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், பணியாளர்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை பெறும் திட்டத்தில் ஈடுபாடு காட்டவில்லை.

இதையொட்டி கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டு குப்பைகளை தெருவிலேயே கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பை, காற்றில் பறந்து தெருவில் நடந்து செல்வோர் மீது விழுகிறது.

இவற்றில் மாடுகள், நாய்கள், பன்றிகள் தங்களின் உணவுகளை தேடி வந்து குப்பையை கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இதில் கொசு உற்பத்தியாகி கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், ஒரு சில பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பையை புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும் ஜோதிநகரில் கொட்டி எரிக்கின்றனர்.

கேளம்பாக்கம் ஊராட்சி மட்டுமின்றி தையூர் ஊராட்சி குப்பைகளும் ஜோதி நகரை ஒட்டி கொட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதி நகரில், குப்பையை தீவைத்து எரித்தனர். இதனால் ஜோதிநகர், மஜீத் நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறி, பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. இரவு முழுவதும் எரிந்த தீ, நேற்று காலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வந்தது. இந்த திடீர் தீயால் இரவு முழுவதும் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்தனர்.

தற்போது அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் திட்டப்பணி மேற்கொள்ளப்படுவதால் கேளம்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி, தெருக்களில் குப்பை கொட்டப்படுவதையும், தீ வைத்து எரிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Related Stories:

>