×

காட்டுமன்னார்கோவிலில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 7 பெண்கள் உடல் சிதறி பரிதாப பலி: 2 பெண்களுக்கு தீவிர சிகிச்சை

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 பெண்கள் கவலைக்கிடமாக உள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி கிராமத்தில் சுமார் 10 தனியார் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக பட்டாசு தயாரிப்பு பணிகள் கடந்த 5 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்தன. 1-ம் தேதியில் இருந்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியது.

குருங்குடி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இயங்கி வரும் காந்திமதி என்பவரது பட்டாசு தயாரிப்புக்கூடத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் காந்திமதி உள்பட 9 பெண்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாசில் மருந்து திணிக்கும் போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து வெடித்துச் சிதறிய தீ மற்ற வெடி பண்டல்களிலும் பற்றிக்கொண்டு ஒட்டுமொத்தமாக வெடித்து தொழிற்கூடம் முழுவதையும் இருக்கும் இடம் தெரியாதவாறு தரைமட்டமாக்கியது.  தகவலின்பேரில், காட்டுமன்னார்கோவில் தீயணைப்புப் படைவீரர்கள் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விபத்தில் இறந்த தொழிற்கூட உரிமையாளர் சின்னதுரை மனைவி காந்திமதி(58), பெருமாள் மனைவி மலர்கொடி(65), நம்பியார் மனைவி லதா(40), உத்தராபதி மனைவி சித்ரா(45), மாதவன் மனைவி ராசாத்தி(48) ஆகிய 5 பேரின் உடல்களை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் மனைவி ருக்மணி(38), ரங்கநாதன் மனைவி ரத்னாயாள்(60), முத்து மனைவி தேன்மொழி(35), நம்பியார் மகள் அனிதா(26) ஆகிய 4 பேரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ருக்மணி, ரத்தினம்மாள் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவர்களில் தேன்மொழி மற்றும் அனிதா ஆகிய இருவரும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, எஸ்.பி. ஸ்ரீஅபி நவ், விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தலைவர்கள் இரங்கல்: பட்டாசு வெடி விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், ‘குறுங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில் கனகராஜ் என்பவரின் பட்டாசு ெதாழிற்கூடத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் பலியான செய்தி சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் வருமானம் இல்லாமல் இருந்த தொழிலாளர்கள், தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே இத்தகைய விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

தலா ரூ2 லட்சம் முதல்வர் நிவாரணம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில், காந்திமதி, மலர்கொடி, லதா, ராசாத்தி, சித்ரா, ருக்மணி மற்றும் ரத்தினம்மாள் ஆகிய 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 7 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : women ,factory explosion ,Firecracker ,Katumannarkov , In Kattumannarko, firecracker factory, fire;
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...