×

செம்மரக்கட்டை விற்றதில் தகராறு; கூலி தொழிலாளி அடித்து கொலை: நண்பர்கள் கைது

பெரம்பூர்: கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் புகாரி (43). மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரது நண்பர்கள் ஓட்டேரியை சேர்ந்த சம்பந்தமூர்த்தி (20), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் (37). இவர்கள் மூவரும் பழைய கட்டிடங்களை இடிக்கும் வேலை செய்து வந்தனர். பெரம்பூர் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் தங்கியிருந்த இவர்கள், நேற்று முன்தினம் அயனாவரத்தில் ஒரு வீட்டை இடித்துள்ளனர். அதில் செம்மரம் கிடைத்துள்ளது. புகாரியிடம் அதை கொடுத்து விற்றுத் தரும்படி செந்தில்குமாரும், சம்பந்தமூர்த்தியும் கூறியுள்ளனர்.

அதன்படி அவர் விற்பனை செய்தார். பின்னர், மூவரும் நேற்று மதியம் அமர்ந்து மது அருந்தினர். அப்போது, செம்மரம் விற்றதில் கிடைத்த ₹10 ஆயிரத்தில், ₹5 ஆயிரத்தை புகாரி தனது நண்பர்களிடம் கொடுத்து, பிரித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதை ஏற்காத அவர்கள், ₹10 ஆயிரத்தை சரிசமமாக பிரிக்கும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர் மறுத்ததால், மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த செந்தில்குமார் மற்றும் சம்பந்தமூர்த்தி ஆகிய இருவரும் அருகில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து புகாரி தலையில் பலமாக அடித்து உள்ளனர்.

இதில் புகாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து ஓட்டேரி போலீசாசார் சம்பவ இடத்திற்கு சென்று, புகாரி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய செந்தில்குமார் மற்றும் சம்பந்தமூர்த்தி ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags : Dispute ,Wage worker ,Friends ,death , Sheepskin, arrested
× RELATED நெல்லை அருகே நில தகராறில் 3 பேர் கைது