×

வேலையின்மையால் இளைஞர்கள் தவிப்பு: தீர்வை கண்டறிய ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குரிய தீர்வுகளைக் கண்டுபிடியுங்கள்’’ என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புறங்களின் வேலைவாய்ப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஜூலை மாதம் 37.6 என்ற சதவிகிதமாக வேலைவாய்ப்பு இருந்தது. ஆகஸ்ட்டில் 37.5 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.4 ஆக உயர்ந்துள்ளது.

இளைஞர்கள் சந்தித்துவரும் வேலைவாய்ப்பின்மைக்கும், அவர்களின் வறுமையைப் போக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை மத்திய அரசு தேட வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார். வேலைவாய்ப்பின்மை பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளாரான பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா காரணமாக பல தனியார் நிறுவனங்கள் ஆள் குறைப்பை செய்துவருகிறது. இதனால் வேலை இழந்துள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அதே நேரத்தில் அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், வேலைவாய்ப்புகள் நிரம்பி இருப்பதாகப் பொய்யான விளம்பரங்களை அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

Tags : Rahul , Unemployment, Youth Suffering, Rahul
× RELATED சொல்லிட்டாங்க…