×

மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்க 2 படிநிலைகளில் காற்று சுத்திகரிப்பு: நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்க இரண்டு படிநிலைகளில் காற்று சுத்திகரிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை வரும் 7ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், மெட்ரோ நிலையங்களில் காற்று சூழல் பராமரிப்பு குறித்து நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் அனைத்து சுரங்க வழிப்பாதை ரயில் நிலையங்களிலும் 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் தட்பவெப்ப சூழலும் 40 முதல் 70 சதவீதம் வரையிலான ஈரப்பதம் மட்டுமே பராமரிக்கப்படும்.

ரயில் பெட்டிகளில் தட்பவெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே பராமரிக்கப்படும். இதேபோல், தூய்மையான காற்று 100 சதவீதம் உட்செலுத்தப்பட்டு தூய்மை பராமரிக்கப்படுகிறது. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உட்புறம் எப்போதும் சுகாதாரமான காற்றை பராமரிக்க தினந்தோறும் 4 மடங்கு தூய்மையாக காற்று சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காற்று இரண்டு படிநிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு உட்செலுத்தப்படுகிறது. முதல் நிலையில் 10 மைக்ரான் அளவிலும், இரண்டாவது நிலையில் 5 மைக்ரான் நிலையிலும் மிக நுணுக்கமாக தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், கூடுதலாக கார்பன் டை ஆக்ஸைடு அளவும் 400 முதல் 500 பிபிஎம் அளவில் ரயில் நிலையங்களுக்குள் பராமரிக்கப்படுகிறது. காற்று செல்லும் பாதையில் அல்ட்ரா வைல்ட் கதிர்கள் செலுத்தப்பட்டு நுண்ணிய கிருமிகள் அழிக்கப்படுகிறது. காற்று வடிப்பான்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி சுருள்கள் வாரம் ஒருமுறை சோடியம் ஹைபோகுளோரைட் திரவம் கொண்டு தூய்மைப்படுத்தப்படுவதால் எல்லாவித நுண்கிருமிகளும் அழிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் அனைத்தும் சக்திவாய்ந்த மின்விசிறிகள் கொண்டு காற்று செலுத்தப்படுகின்றன. இதனால் நுண்ணுயிரிகள் கூட அகற்றப்படுகின்றன. இதன்மூலம் கொரோனா பரவலை தடுத்து 100 சதவீத பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : stations ,spread , Metro rail, air purification in 2 stages,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...