×

சென்னை உயர்நீதிமன்ற கொலிஜியத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: நீதிபதிகளாக தங்களுடைய பெயர்கள் பரிந்துரை செய்யப்படாததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற கொலிஜியத்திற்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும் சென்னை உயர்நீதிமன்ற கொலிஜியம் தங்களின் பெயர்களை புறக்கணித்ததாகவும், அதற்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கு அவர்கள் ஜூனியர்களை பரிந்துரைத்ததாகவும் குற்றம் சாட்டி பதிவாளர் ஆர்.பூர்ணிமா, தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணைய உறுப்பினர் செயலாளர் கே.ராஜசேகர் ,சென்னையில் உள்ள குடும்ப நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதி ஏ.கே.ஏ. ரஹ்மான், முதன்மை மாவட்ட நீதிபதிகள் ஆர்.சக்திவேல், ஏ.காந்தகுமார், ஏ.நசீமா பானு, எம்.டி.சுமதி மற்றும் எம்.சுரேஷ் விஸ்வநாத் ஆகிய எட்டுபேரும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு தங்களை பரிசீலிக்காத உயர்நீதிமன்ற கொலிஜியத்தின் முடிவு அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை பல கட்டங்களாக விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 31ம் தேதி தீர்ப்பை தேதிக்கு குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,”நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கொலிஜியத்திற்கு எதிராக எட்டு பேர் தொடர்ந்த மனுக்களில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், அதனை தள்ளுபடி செய்வதாக நேற்று உத்தரவிட்டார்.

Tags : Chennai High Court Collegium ,Chennai High Court ,Supreme Court , Chennai High Court Collegium, dismissed by the Supreme Court
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...