×

சென்னை பெரும்பாக்கத்தில் பயங்கரம்; திமுக, தேமுதிக பிரமுகர்கள் வீடு மீது குண்டு வீச்சு: போலீசார்-ரவுடிகள் கூட்டணியால் தொடரும் சம்பவங்கள்

சென்னை:  சென்னை பெரும்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு முன்விரோதம் காரணமாக, திமுக, தேமுதிக பிரமுகர்கள் வீடுகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. ரவுடிகளுக்கு போலீசார் ஆதரவாக இருப்பதாலும், நடவடிக்கை எடுக்காமல் பணம் வாங்கிக் கொண்டு விட்டுவிடுவதாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை பெரும்பாக்கம், மேட்டுத்தெருவை   தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(37). தேமுதிக ஒன்றிய துணை செயலாளர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராஜசேகர் வீட்டின் அருகே நின்றிருந்தபோது, 5 பேர் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. மேலும், அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியது. படுகாயம் அடைந்த ராஜசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள், அருண், விக்கி, அரவிந்த் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பெரும்பாக்கம் வீரபத்திரன் நகரில் வசிக்கும் வேங்கைவாசல் திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வனஜா தனசேகரன் வீட்டில் காரில் வந்த 2 ரவுடிகள் 2 குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

அந்த 2 குண்டுகளும் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இது குறித்து,  பள்ளிக்கரணை போலீசில் வேங்கைவாசல் ஊராட்சி  முன்னாள் தலைவர் வனஜா தனசேகரன் புகார் அளித்தார். தகவலறிந்ததும்  இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். தடயவியல் துறை உதவி இயக்குநர் சோபியா தலைமையில் நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், வெடிக்காத குண்டுகளை கைப்பற்றினர்.  வனஜா வீட்டில் குண்டுகள் வீசியதாக தேமுதிக பிரமுகர் ராஜசேகரின உறவினர் ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர். பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் அருள் என்பவரை பெரும்பாக்கம் ராஜேஷ், ஓட்டேரி கார்த்திக் உள்ளிட்ட பலர் சேர்ந்து அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கினார். வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். அதில் அருள் படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவத்துக்கு மூலகாரணம் ராஜசேகர் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. பணம் வாங்கி கொண்டு கைது செய்யாமல் விட்டதால்தான் மீண்டும் மீண்டும் இந்தப் பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின்பேரில், ரவுடிகள் பெரும்பாக்கம் ராஜேஷ், ஓட்டேரி கார்த்திக் ஆகியோர் தலைமையில் வந்த ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

அதில் ராஜேஷ் மீது ஒரு கொலை வழக்கு உள்பட  8 வழக்குகள் உள்ளன. ரவுடி ஓட்டேரி கார்த்திக், நெடுங்குன்றம் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளி.  பாஜவில் சூர்யாவுடன் ஓட்டேரி கார்த்திக்கும் சேர முயன்றான். ஆனால், போலீசார் வந்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னர்தான்  திமுக பிரமுகர் வீட்டில் ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து ஓட்டேரி கார்த்திக் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். மேலும், அந்த  பகுதியில் ரவுடிகள் 2 முறை அரிவாள்  வைத்து நடுரோட்டில் ஊரடங்கு நேரத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கைது செய்யாமல் அமைதியாகிவிட்டனர். இவ்வாறு தொடர்ந்து போலீசார் கை கட்டி வேடிக்கை பார்ப்பதல்தான் பள்ளிக்கரணை பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.           

பல லட்சம் கொடுத்து போஸ்ட்டிங் வாங்கும் போலீசார்
பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் என்பது, நில அபகரிப்பு அதிகமாக நடைபெறும் பகுதியாகும். இதனால் இந்த போலீஸ் நிலையத்துக்கு போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை வருவதற்கு கடுமையான போட்டி இருக்கும். பல லட்சங்களை செலவு செய்கிறவர்கள்தான் இங்கு வரமுடியும் என்ற நிலை உள்ளது. இந்த போலீஸ் நிலையத்துக்கு வருகிறவர்களுக்கு நில அபகரிப்பு கும்பல், ரவுடிகள் செலவு செய்து போலீசாரை வாங்கி வருவார்கள். போலீசார் யாருக்கு துணையாக இருக்கிறார்களோ அவர்கள்தான் இந்தப் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தலில் ஈடுபட முடியும். எந்த குற்றங்கள் நடந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

ரவுடிகள் முன்ஜாமீன் பெற்றுச் சென்று விடுவார்கள். பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாகவே இருப்பார்கள். அவர்கள் போலீஸ்நிலையமும் வந்து செல்வார்கள். பெரும்பாக்கம் ராஜேஷ் மீது பல புகார்கள் வந்தாலும், பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். இதனால்தான் அந்தப் பகுதியில் தொடர்ந்து வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு மோதல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இப்போதாவது போலீசார் விழித்துக் கொண்டு ரவுடிகளுக்கு ஆதரவாக இல்லாமல் துணிச்சலாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : parts ,Temujin ,DMK ,Chennai ,police-rowdies alliance ,personalities , Chennai, bombing, police-rowdies alliance
× RELATED அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன?