×

எல்லையில் பதற்றமான சூழல்; படைகளை குவிக்கும் ராணுவம்: தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாக தளபதி நாரவனே தகவல்

லே: எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், படைகள் குவிக்கப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளவதி நாரவனே தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரலில் தொடங்கி எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறியதால் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இதனால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது.

பதற்றமான சூழலை தவிர்ப்பதற்காக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளிடையே தொடர்நது பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக இருப்பதாக சீனா தொடர்ந்து பேசினாலும் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலை தொடர்கிறது. இதற்கிடையே, கடந்த 29-30ம் தேதி இரவில் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் மீண்டும் சீனாவின் அத்துமீறல் முயற்சிகளுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து முறியடித்தது. இதன் காரணமாக தற்போது லடாக்கில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும் படைகளை குவித்து வருகின்றன.

இந்நிலையில் ராணுவ தளபதி நாரவனே எல்லையில் லடாக்கின் லே பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் பாதுகாப்பு நிலைகளை பார்வையிட்டார். பின்னர் ராணுவ அதிகாரிகளுடன், மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி நாரவனே கூறுகையில், “எல்லையின் வெவ்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டேன். ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். வீரர்களின் மன உறுதி மிக அதிகமாக உள்ளது. அவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளனர்.

தற்போது உண்மை கட்டுப்பாடு கோடு பகுதியில் விரைவில் மோதல் ஏற்படும் மோசமான சூழல் நிலவுகின்றது. அதை பற்றி சிந்திக்கிறோம். நமது பாதுகாப்புக்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லையில் நிலைமை மாறாது என நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் எங்களுக்கு உதவும்” என்றார்.

பீரங்கிகளை இறக்கியது சீனா
போர் பதற்றம் நிலவும் நிலையில், கிழக்கு லடாக்கின் பாங்காங் பகுதியில் சீன ராணுவம் பீரங்கிகளை நிலைநிறுத்தி இருக்கிறது. இப்பகுதியில் ஏரியை ஒட்டிய தாழ்வான பகுதிகள் சீன எல்லைக்குள்ளும், மலைப்பாங்கான பகுதிகள் இந்திய எல்லைக்குள்ளும் உள்ளன. இதனால், சீனாவின் செயல்பாடுகளை உடனுக்குடன் இந்திய ராணுவம் அறிந்து கொள்கிறது. குறிப்பாக பாங்காங் திசோ அருகேயுள்ள பிளாக் டாக், ஹெல்மேட், மால்டோ ஆகிய பகுதிகளை சீனா தனது படைகளை களம் இறக்கியுள்ளது. சக்திவாய்ந்த பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள், சிறுசிறு ஆயுதங்களை குவித்துள்ளது.

மலை முகடுகள், அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் இந்த பீரங்கிகளை களம் இறக்கியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், சீனாவின் மற்ற ஆயுதங்களை விட சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகளை இந்தியா களம் இறக்குகிறது.


Tags : Narawane ,border ,troops ,Army , Border, Army, Army, Commander Narwane
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது