×

ஆந்திராவில் ஊரடங்குக்குப் பின் இயங்கிய ஆலையில் ரசாயன கலவை வெடித்து: தந்தை, மகன் பரிதாப பலி

திருமலை: ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ரசாயன கலவை வெடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், சூரப்பள்ளி நகரில் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது. இந்நிறுவனத்தில் நேற்று முன்தினம் மாலை ரசாயன கலவை பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜயவாடாவை சேர்ந்த தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேர் கண்ணவரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த கம்பெனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த 6 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம் எவ்வித அரசு அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இயங்காமல் இருந்த இந்நிறுவனம் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. இதனால், அங்கு ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தேக்கி வைத்திருந்த ரசாயனம் வெப்பமடைந்து திடீரென வெடித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் ரசாயன கலவை வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : plant ,Andhra Pradesh , Andhra, plant, chemical compound exploded
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி