யுஎஸ் ஓபன் டென்னிஸ் நாகல், மர்ரே வெளியேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன்  டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே தோற்று வெளியேறினர். பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சுமித் நாகல், தனது 2வது சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதினார். நாகல் சளைக்காமல் போராடியும், 3வது ரேங்க் வீரரான டொமினிக் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப்போட்டி 1 மணி, 59 நிமிடங்கள் நடந்தது. மற்றொரு 2வது சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே, கனடாவின் பெலிக்ஸ் அகர் அலியஸ்சிமி மோதினர்.

காயம், அறுவை சிகிச்சைகள் காரணமாக கடந்த 9 மாதங்களாக விளையாடாமல், பயிற்சி பெறாமல்  இருந்ததால் ஏற்படும் தடுமாற்றங்கள் மர்ரேவின் ஆட்டத்தில் வெளிப்பட்டன. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பெலிக்ஸ்  6-2, 6-3, 6-4 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), பாஸ்பிசில் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

செரீனா முன்னேற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் மார்கரிடா கேஸ்பர்யானை (ரஷ்யா) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சோபியா கெனின், அமண்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகிட்யோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஸ்பெயினின் கார்பினி முகுருசா தனது 2வது சுற்றில் (10வது ரேங்க்) 5-7, 3-6 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் ஸ்வெடனா பிரான்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Related Stories: