×

சேலத்தில் நள்ளிரவில் நடந்த கோர சம்பவம்; தீயில் கருகி ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி: போலீஸ் விசாரணையில் உருக்கமான தகவல்கள்

சேலம்: சேலத்தில் நள்ளிரவில் நடந்த தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர், உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி அமுதா. இவர்களது மகன்கள் அன்பழகன் (40),  கார்த்திக் (37). கார்த்திக் மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன்கள் சர்வேஷ் (12), முகேஷ் (10). அன்பழகன் மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சகோதரர்களான அன்பழகன், கார்த்திக் இருவரும் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் நரசோதிப்பட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டினர்.

அந்த வீட்டில் கார்த்திக், அன்பழகன் ஆகிய இருவரின் குடும்பமும், சேட்டு, அமுதா ஆகியோரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். வீட்டில் பெரிய அளவில் ஹால் மற்றும் 4 படுக்கை அறைகள் உள்ளன. இதில் முதல் அறையில் கார்த்திக் குடும்பமும், இரண்டாவது அறையில் அன்பழகன் குடும்பமும், மூன்றாவது அறையில் பெற்றோரும் தங்கியுள்ளனர். வீட்டின் வரவேற்பறையில் பெரிய அளவிலான எல்.இ.டி. டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு அருகிலேயே ஏ.சி.யும் இணைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு அனைவரும் அவரவர் அறையில் தூங்கச்சென்றனர். நள்ளிரவு 12.15 மணிக்கு வீட்டில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார்  ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில்  கார்த்திக், அவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ், முகேஷ் மற்றும் அன்பழகன் மனைவி புஷ்பா ஆகியோர் இறந்தனர். இறந்தவர்களின் சடலங்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தின்போது மாடியில் படுத்திருந்த அன்பழகன், அங்கிருந்து குதித்ததால் உயிர் தப்பியுள்ளார். தகவல்  அறிந்த சேலம் கலெக்டர் ராமன், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கார்த்திக், அன்பழகன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்துள்ளனர். வீட்டு ஹாலில் பெரிய அளவில் மரத்தாலான அலமாரி இருந்தது. அதற்குள் பொருத்தப்பட்டிருந்த டி.வி.யில் மின்கசிவு ஏற்பட்டு தீ பரவியுள்ளது.  இது அருகிலிருந்த ஏ.சி மெஷினிலும் பரவி, வீடு முழுக்க கரும்புகை சூழ்ந்துள்ளது. இதில் ஹாலுக்கு அருகில் முதல் அறையில் இருந்த கார்த்திக் குடும்பத்தினர் மூச்சுத்திணறி, பலியாகி உள்ளனர். அடுத்த அறையில்  அன்பழகன் மனைவியும் உயிரிழந்துள்ளார். இவரது மகன், மகள் மற்றொரு அறையில் இருந்ததால் உயிர் தப்பினர்.

அடுத்த அறையில் இருந்து சேட்டு, அமுதா வெளியே வராததால் உயிர் தப்பியுள்ளனர். அதேபோல் மற்றொரு அறையில் கார்த்திக் அக்கா மல்லிகா வெளியே வராததால் உயிர் தப்பினார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும், மின்விபத்தால் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி இரங்கல்: இந்த சம்பவத்தில், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பணத்துக்காக நடந்ததா?
அன்பழகன், கார்த்திக் ஆகிய அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து குரங்குச்சாவடியில் 5 ஆயிரம் சதுரடியில் ₹1 கோடி மதிப்பிலான பங்களாவை கட்டினர். வீட்டின் அருகில் சுமார் 3 ஆயிரம் சதுரடியை ₹3 கோடிக்கு நிலம் பேசி முடித்துள்ளனர். இதில் முன்பணமாக ₹1கோடி வழங்கப்பட்டது. இதற்கான பத்திரல் பதிவு நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால் முந்தைய இரவில்தான் தீ விபத்தில் கார்த்திக் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். வீட்டில் இருந்த பணத்துக்காக திட்டமிட்டு இந்த விபத்து நிகழ்த்தப்பட்டதா? என்று உறவினர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தடயவியல் துறையினரும் வீட்டில் விசாரணை நடத்தினர்.

Tags : incident ,Cora ,Salem ,death ,Police investigation , Salem, fire, 5 killed, police investigation
× RELATED விகேபுரம், பாபநாசத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 2 முதியவர்கள் சாவு