×

பொறியியல் படிப்பில் ஆல் பாஸான 4 லட்சம் அரியர்ஸ் மாணவர்களுக்கு சிக்கல்: தமிழக அரசின் முடிவை ஏஐசிடிஇ ஏற்க மறுப்பு

சென்னை: தமிழகத்தில் தேர்வு கட்டணம் கட்டிய அனைத்து அரியர்ஸ் மாணவர்களும் பாஸ் என்ற தமிழக அரசு அறிவிப்பு செல்லாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் திடீரென்று அறிவித்துள்ளது. இதனால் 4 லட்சம் மாணவர்களின் தேர்ச்சி நிலை கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க வேண்டிய கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற தேர்வு எழுத உள்ள பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பால் அரியர்ஸ் தேர்வு எழுத இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம்(AICTE) சார்பில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில், அரியர் மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அதனால் அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்திய பிறகே தேர்ச்சி வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தரும், ஏஐசிடிஇ கமிட்டியின் தென் மண்டல தலைவருமான சூரப்பா உறுதிப்படுத்தியிருந்தார். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்றும் குழப்பத்தில் இருந்தனர். இந்தநிலையில் ஏஐசிடிஇயின் அறிவிப்பும், சூரப்பாவின் பேட்டியும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4 லட்சம் அரியர் மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே சிலர் ஏஐசிடிஇ யின் கருத்தின் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித்துறையின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ராம்குமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு எதிரானது. இதுபோன்ற அறிவிப்பை வெளியிட உயர் கல்வி துறை செயலாளருக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது. பல்கலைகழக செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றிற்கு மட்டுமே தேர்வை நடத்தவும் ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளியிடப்பட்ட யுஜிசி தேர்வுகள் தொடர்பாக விதிமுறைகளை புறக்கணிக்கும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டவிரோதமாகும்.

தனித் தேர்வர்களுக்கான தேர்வை அறிவித்துவிட்டு, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சியை அறிவிப்பது என்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது. கலை, அறிவியல், டிப்ளமோ, இன்ஜினியரிங், எம்.சி.ஏ. படிப்பவர்கள் மட்டுமே பலன் பெறுவதாகவும், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியோருக்கு பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. அரியர் தேர்வுகளை தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தலாமே தவிர ரத்து செய்ய முடியாது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதாமல் ஆகஸ்ட் 26ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் யுஜிசி வழிகாட்டுதளின் படி அரியர் தேர்வுகளை எழுதுமாறு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக துணை  வேந்தர் சூரப்பா கூறுவது போல் எந்த மின்னஞ்சலும் ஏஐசிடிஇ- சார்பில்  வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் அதை துணை வேந்தர் சூரப்பாக பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

துணை வேந்தர் தனது சொந்த கருத்தை ஏஐசிடிஇ-யின் கருத்தாக திணிக்க முயற்சி செய்கிறார். யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின்  விதிகளுக்கு உட்பட்டே அரசு முடிவு எடுத்துள்ளது. அதனால் தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு ஏஐசிடிஇக்கு உள்ளது. இதனால் அந்த துறையின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளது.

Tags : Aryans ,AICTE ,Government of Tamil Nadu ,Tamil Nadu , Engineering Study, All Pass, Arias Student, Issue: Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...