×

திருக்குறுங்குடியில் உருக்குலைந்த சாலையால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அவதி

களக்காடு: திருக்குறுங்குடியில் உருக்குலைந்த சாலையால் விபத்து அபாயம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திருக்குறுங்குடி பெரியகுளத்தில் பழுதடைந்த நடுமடையை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. இதற்காக குளத்தின் கரை பகுதியான களக்காடு - பணகுடி பிரதான சாலை துண்டிக்கப்பட்டது. நடுமடை பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் துண்டிக்கப்பட்ட சாலை மண் போட்டு நிரப்பப்பட்டபோதும் இதுவரை புதிதாக தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் உருக்குலைந்த இச்சாலையால் விபத்து அபாயம் நிலவுகிறது. தென்காசி, நாகர்கோவிலை இணைக்கும் முக்கிய சாலையான இதில் அதிக அளவில் தினமும் வந்துசெல்லும் வாகனஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து திருக்குறுங்குடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாரியப்பன் கூறுகையில் ‘‘நடுமடை சீரமைக்கப்பட்ட பிறகு தார் சாலை அமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்.

எனவே, உருக்குலைந்து போக்குவரத்துக்கு பயனற்ற இச்சாலையால் டூவீலர்களில் வரும் பயணிகள் இங்குள்ள குண்டு, குழிகளில் சிக்கி விபத்துக்கு உள்ளாகும் அவலம் தொடர்கிறது. மேலும் இரவுநேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி இங்கு வரும் கார்களும் விபத்தில் சிக்குகின்றன. மேலும் இச்சாலையை விரைவில் சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது கண்டனத்துக்குரியது. தற்போது குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பியுள்ளது. எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : road ,Motorists , Thirukurungudi, accident risk, motorists
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...