×

தமிழகம் முழுவதும் 40 ஆண்டுகளாக மறு சர்வே செய்யப்படாத நிலங்கள்: கிடப்பில் போடப்பட்ட 7,86,837 பட்டா மாறுதல் விண்ணப்பம்

கோவை:  தமிழகம் முழுவதும் கடந்த 40 ஆண்டுகளாக நிலங்கள் மறுசர்வே செய்யப்படாமல் உள்ளது. 7,86,837 பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் விவசாய நிலம், தரிசு நிலம், புறம்போக்கு நிலம், குடியிருப்பு பகுதி, வனப்பகுதி, நீர்ப்பிடிப்பு பகுதி என பல வகையான நிலப்பரப்பு எந்தெந்த அளவில் உள்ளது என்பதை 30 ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடுவது வழக்கம். இதன்மூலம், தனிநபர் நிலப்பரப்பும், அரசு நிலப்பரப்பும் எளிதாக அடையாளம் காண முடியும். அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் நிலம், அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்த வேண்டிய நிலம் என பல வகைகளில் இந்த கணக்கெடுப்பு அரசுக்கு பெரிதும் உதவுகிறது. அதன்படி, கடந்த 1979ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடந்தது. அதன்பிறகு, கடந்த 40 ஆண்டுகளாக நிலம் மறுசர்வே கணக்கெடுப்பு நடக்கவில்லை. இதனால், யார், யார் நிலம் எங்கெங்கு உள்ளது?, எந்தெந்த நிலங்களுக்கு பட்டா உள்ளது?, பட்டா மாறுதல் செய்யப்பட்ட நிலம் எது? அரசு கையகப்படுத்த வேண்டிய நிலம் எது? என அடையாளம் காணப்படுவதில் சிக்கல் உள்ளது. உதாரணமாக, பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணம் பதிவு செய்யப்பட்டு, சொத்து கைமாறும்போது, பட்டா மாறுதலும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டால், இதுபோன்ற குழப்பம் வராது.

ஆனால், நிலம் உட்பிரிவு செய்யப்படாமலும், பட்டா மாறுதல் செய்யப்படாமலும் நிறைய விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் இதுநாள் வரையில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்கப்பட்ட 7,86,837 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை, முறையாக அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்க சர்வேயர் பணியிடம் சுமார் 7 ஆயிரம் காலியாக இருக்கிறது. அதனால், பட்டா மாறுதல் விண்ணப்பம் தேங்கி கிடக்கிறது. ஒரு நபர், ஒரு ஏக்கர் நிலம் கொண்ட ஒரு விவசாயிடமிருந்து 10 ெசன்ட் நிலத்தை வாங்கும்போது, அந்த 10 ெசன்ட் நிலத்தை மட்டும் தனியாக அளந்தெடுத்து (உட்பிரிவு செய்து), அவருக்கு பட்டா மாறுதல் ெசய்துகொடுக்க வேண்டியது சர்வேயர் மற்றும் வருவாய்துறையினர் பொறுப்பு. ஆனால், சர்வேயர் பணியிடம் காலியாக இருப்பதால், இந்த பணியை ெசய்ய முடியாமல், விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 10 சென்ட் நிலம் வாங்கிய நபர், அந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து கடனுதவி பெற முயலும்போது, அந்த நபருக்கு பட்டா மாறுதல் ஆவணமும் தேவை. பட்டா மாறுதல் கிடைக்காத காரணத்தால், அந்த நபரால் வங்கி கடனுதவி பெற முடியவில்லை. இதேபோல், எண்ணற்ற பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சர்வேயர் பணியிடம் காலியாக இருப்பதே முக்கிய காரணம். இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: தமிழக அரசுத்துறைகளில், சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை போன்ற துறைகளில் காலிப்பணியிடம் ஏற்படும்போது, உடனுக்குடன் ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். அதுபோல், சர்வேயர் துறையிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பி, நிலம் மறு சர்வே துவக்கப்பட வேண்டும்.

இதை முறையாக செய்தால்தான், அரசு திட்டப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஏதுவாக இருக்கும். அத்துடன், விவசாயிகள் தங்களது வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்காக பட்டா மாறுதல் செய்ய முடியும். காலம் தாழ்த்தாமல் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சு.பழனிசாமி கூறினார்.

பட்டா மாறுதல்
எளிதா?
தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் சமீபத்தில் ஒரு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, புதிதாக சொத்து வாங்கும்போது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த உடனேயே பட்டா மாறுதலும் செய்யப்பட்டு விடும். இத்திட்டம், 100 சதவீதம் வெற்றி அளிக்கவில்லை. உதாரணமாக, 50 சென்ட் நிலம் வைத்துள்ள ஒரு நபரிடமிருந்து, 50 சென்ட் நிலத்தை முழுமையாக அப்படியே இன்னொரு நபர் வாங்கும்போது மட்டுமே இது சாத்தியம் ஆகிறது. அதை பிரித்து, சிறிதளவு மட்டும் நிலம் வாங்கும்போது, உட்பிரிவு செய்து, பட்டா மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு, சர்வேயர் தேவைப்படுகிறார்.
சர்வேயர் பணியிடம் நிரப்பப்பட்டால் மட்டுமே உடனுக்குடன் பட்டா மாறுதல் என்பது சாத்தியம் ஆகும்.

செலவு இல்லாத திட்டம்
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் நிலம் மறுசர்வே செய்ய தோராயமாக 500 கோடி ரூபாய் செலவு செய்தால், அதை அப்படியே விரைவாக திரும்ப எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக, பட்டா மாறுதல் செய்யும்போது அதற்கென விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும்போது, இந்த தொகை மிக எளிதாக அரசு கஜானாவுக்கு வந்துவிடும். இதன்மூலம், செலவின்றி இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்’’ என்றனர்.


Tags : Lands ,Tamil Nadu , Lands ,re-surveyed ,40 years ,Tamil Nadu,applications
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...