×

5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பழுது பார்க்க வேண்டும் ஆம்னி பஸ்களை மீண்டும் இயக்க ஒரு பஸ்சுக்கு 5 லட்சம் செலவாகும்: உரிமையாளர்கள் புலம்பல்

சேலம்: ஊரடங்கு அமலால் ஐந்து மாதத்திற்கு மேலாக ஆம்னி பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் பழுது பார்த்து, வரி கட்டி இயக்க ஒரு பஸ்சுக்கு ₹5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் பரவியதையடுத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது.பொதுமக்களின் நலன் கருதி பஸ்கள் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வந்தனர். இதை பரிசீலித்த அரசு இம்மாதம் 1ம் தேதி முதல், மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவித்தது. இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்குள் அரசு பஸ்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதேபோல் அன்றைய தினமே ஆம்னி பஸ்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆம்னி பஸ்கள் இயக்கும்ேபாது, அந்த பஸ்சிற்குரிய காலாண்டுக்கான சாலை வரியை கட்டி இருக்க வேண்டும். 40 பேர் அமரும் பஸ்சில் 23 பேரை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் இந்த கட்டுப்பாடுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. காலாண்டு சாலை வரி கட்டிவிட்டு, பஸ்கள் இயக்குவது என்பது இயலாத காரியமாகும் என்று வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தாரை. திருஞானம் கூறியதாவது: தமிழ்நாடு பதிவு எண் கொண்ட 2500 ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்குகிறது. இதைதவிர நாகலாந்து, பாண்டிச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா பதிவு எண் கொண்ட பஸ்கள் ஆயிரம் உள்ளது. ஆம்னி பஸ்களில் கிலோ மீட்டருக்கு தகுந்தவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தொழிலை நம்பி டிரைவர், கிளீனர், எலக்ட்ரீசியன், மெக்கானிக் என்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆம்னி பஸ் இயக்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு அரசுக்கு பல கோடிக்கு வரி கிடைக்கிறது. இதைவிர டோல் கட்டணம், டீசல், வாகனம் உதிரிபாகம், டயர், இன்சூரன்ஸ் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ₹750 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தி வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வரும் 7ம் தேதி முதல் ஆம்னி பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்றால் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குரிய சாலைவரி ₹2 லட்சத்து 25 ஆயிரத்தை முதலில் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.  ஐந்து மாதமாக பஸ்கள் இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்சில் சீட்டுகள், பேட்டரி, இன்ஜின் பழுதாகி இருக்கும். இதற்கு சர்வீஸ் செய்ய, ஒரு பஸ்சுக்கு குறைந்தபட்சம் ₹3 லட்சத்திற்கு மேல் செலவாகும். பஸ்சுக்கான இன்சூரன்ஸ் கட்ட வேண்டும். எப்.சி., காலம் முடிந்து இருந்தால் எப்.சி., காட்ட வேண்டும். இந்த வகையில் ஒரு பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ₹5 லட்சத்திற்கு மேல் செலவு ஆகும்.

மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு 40 பேர் அமரும் பஸ்சில் 23 பேரை தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இப்படி பல்வேறு கஷ்டங்கள் இருக்கும் சூழ்நிலையில் ஆம்னி பஸ்களை இயக்கினால் உரிமையாளர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும்.  ஆம்னி பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என்றால், கொரோனா தொற்றால் பஸ் ஓடாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்ய ேவண்டும்.அதோடு பஸ்களுக்கான இன்சூரன்ஸ் கால கட்டத்தை நீட்டிக்கவேண்டும்.  ஆறு மாதகாலம் செலுத்த வேண்டிய தவணைத்தொகையின் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம். இப்போதைய சூழலில் ஆம்னி பஸ் உரிமையாளர்களால் காலாண்டு சாலை வரியை கட்ட முடியாது. எனவே 7ம் தேதியில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்குவது சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Omni ,Owners , Omni, buses , 5 ,lakh, owners ,lament
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி