×

கஞ்சா பொட்டலத்திற்காக தகராறு தொழிலாளியை கொன்று குளத்தில் மறைத்த நண்பர்கள்: அஞ்சுகிராமம் அருகே பரபரப்பு

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் அருகே கஞ்சா பொட்டலத்திற்காக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை நண்பர்களே கொன்று குளத்தில் உள்ள புதரில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ்டவுண் பாலசவுந்தரிகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மணிகண்டன்(35). கூலி வேலை செய்து வந்தார். காதல் திருமணம் செய்த இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன், மணிகண்டனின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மணிகண்டன் தனியாக வசித்து வந்தார். மணிகண்டன் தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் இவரது உறவினர் செப் 1ம் தேதி வீட்டிற்கு சென்று பார்த்த போது மணிகண்டனை காணவில்லை. மேலும் மணிகண்டனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இதனால் பதட்டமடைந்த மணிகண்டனின் உறவினர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மணிகண்டனின் வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் ரத்தக்கறைகள் படிந்துள்ளது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக மணிகண்டனுடன் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் நண்பர்கள் சிலர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கஞ்சா பொட்டலம் வாங்கி பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. நண்பர்கள் சிலர் சேர்ந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கியுள்ளனர். அதில் மணிகண்டன் 2 கஞ்சா பொட்டலத்தை எடுத்து மறைத்து வைத்துள்ளார். இதுதொடர்பாக ஆக. 31ம் தேதி இரவு அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது நண்பர்கள் மணிகண்டன் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த மணிகண்டன் தப்பி ஓடிமுயன்றுள்ளார். சிறிதுதூரம் ஓடிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தார். பின்னர் நண்பர்கள் சேர்ந்து அவரது உடலை அப்பகுதியில் உள்ள பாலசவுந்தரி குளத்தின் நடுவில் உள்ள புதர் பகுதியில் மறைத்து கட்டி வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் வந்து சுமார் அரை மணிநேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் குளத்தின் நடுவே அழுகிய நிலையில் மணிகண்டன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : Friends ,dispute worker ,Ansugram ,pond , Friends ,killed ,dispute, worker ,commotion ,Ansugram
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...