×

‘வாண வேடிக்கை’ விழாவை வண்ணமயமாக கொண்டாட வாண்டூஸ் முதல் வாலிபர் வரை வசீகரிக்க வெடி கிப்ட் பாக்ஸ் ரெடி: விறுவிறுப்பாக குட்டி ஜப்பானில் தயாராகிறது

சிவகாசி: தீபாவளிப் பண்டிகைக்காக சிவகாசியில் 33 வகையான கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.வரும் நவ.14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணிகளும், வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரே பெட்டியில் அனைத்து ரக பட்டாசுகளும் அடங்கும் கிப்ட் பாக்ஸ்களுக்கு ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் அதிக நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கிப்ட் பாக்ஸ் தயாரித்து அனுப்பும் பணிகள் சிவகாசியில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, கொல்கத்தாவில் துர்கா பூஜை, கர்நாடகாவில் தசரா பூஜை என இந்தியா முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் ஆயுத பூஜை முதல் பட்டாசு வியாபாரம் களை கட்டத் துவங்கும். இதனால் சிவகாசியில் பெரிய மற்றும் சிறிய பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் 33 வகையான கிப்ட் பாக்ஸ்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதில் குழந்தைகளை கவரும் வகையில் தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பாம்பு மாத்திரை, சங்கு சக்கரம், புஸ்வாணம், கார்ட்டூன் வெடிகள் என 20க்கும் மேற்பட்ட பட்டாசு ரக வகைகளை கொண்ட கிப்ட் பாக்ஸ்களும், பெண்களை கவரும் விதமாக தரைச்சக்கரம், கலர் புஸ்வாணம், வாண வெடிகள் என அடங்கிய கிப்ட் பாக்ஸ்களும், இளைஞர்களை கவரும்விதமாக புல்லட் ஃபாம், ஆட்டோ ஃபாம், அணுகுண்டு, லட்சுமி, சரவெடிகள், ராக்கெட் போன்ற வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை தற்போது கடைகளில் பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாக்ஸ்கள் ரூ.350 முதல் 3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் 40% விற்பனை பாதிப்பு
பட்டாசு வியாபாரி கணேசன் கூறுகையில், ``கொரோனா பாதிப்பு காரணமாக திருமண பட்டாசு ஆர்டர்கள், விநாயகர் சதுர்த்தி பட்டாசு விற்பனை மொத்தமாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கால் இந்த ஆண்டு 40 சதவீத பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தளர்வு காரணமாக கடைசி நேரத்தில் கிப்ட் பாக்ஸ்களுக்கு டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விலை உயர்வு என்பது பெரிய அளவிலான வித்தியாசம் இருக்காது. சிவகாசியில் முன்னணி கம்பெனி கிப்ட் பாக்ஸ்கள், 17 முதல் 21 ரகங்கள் அடங்கிய சின்ன கிப்ட் பாக்ஸ் ரூ.350 முதல் 450 வரையும், 23 முதல் 33 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.600 முதல் ரூ.1,000 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும், 33 முதல் 37 ரகங்கள் அடங்கிய விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு கம்பெனிக்கும் ஏற்ப சிறு மாறுதல்களுடன் இருக்கும்’’ என்றார்.

Tags : Little Japan ,Fireworks' Festival ,Vandus ,festival ,Vandos , Vandos ,Valipar ,celebrate ,‘Fireworks’ ,Japan
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...