×

தேக்கடிக்கு ஹெலிகாப்டர் சேவை: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

கூடலூர்: தேக்கடி சுற்றுலாப்பயணிகளுக்காக குமுளியில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சின், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து, சாலை வழியாக 6 மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்து சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொச்சின், எர்ணாகுளம், திருவனந்தபுரத்திலிருந்து அரை மணிநேரத்தில் தேக்கடிக்கு வரும் வகையில், ஹெலிகாப்டர் சேவையை துவக்க கடந்த பிப்ரவரி மாதம் தனியார் நிறுவனம் ஒன்று முன் வந்தது.

 குமுளி ஒட்டகத்தலமேடு பகுதியிலிருந்து கொச்சின், திருவனந்தபுரத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை இயக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. முறையான அனுமதி கிடைக்காததால் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் குமுளி அருகே உள்ள பத்துமுறியில் இருந்து மூணாறுக்கு தனியார் ஹெலிகாப்டர் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா குமுளி ஊராட்சி தலைவர் ஷீபா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து தமிழக - கேரள எல்லையில் ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ஹெலிகாப்டரில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் அமர்ந்து பயணிக்கலாம்.

குமுளியில் இருந்து மூணாறு சென்று திரும்பி வருவதற்கு 1 பயணிக்கு ரூ.11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சின், திருவனந்தபுரம், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான வசதியும் உள்ளது. கொரோனா பாதிப்பு முடிந்து கேரளாவில் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், ஹெலிகாப்டர் சேவை துவங்கியுள்ளது சுற்றுலாப்பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thekkady , Helicopter, service ,Thekkady, Tourists ,delight
× RELATED தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு