கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் பெயிண்டரை வெட்டிக்கொல்ல முயற்சி: 5 பேருக்கு வலை

திருநின்றவூர்: திருநின்றவூரில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெயிண்டரை வெட்டி கொல்ல முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம், காந்தி நகர், எஸ்.எம்.ஆர் தெருவை சேர்ந்தவர் ஜான் ஐசக் புஷ்பராஜ் (44). இவர் பெயிண்டர். கடந்த 8மாதத்திற்கு முன்பு புஷ்பராஜ், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவருக்கு ரூ.85ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சக்திவேல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதன்பிறகு, அவரது வீட்டுக்கு சென்று மனைவி பவானியிடம், புஷ்பராஜ் பணம் கேட்டுள்ளார். அப்போது, எனது கணவர் இறந்து விட்டார். என்னிடம் பணம் இல்லை என பவானி கூறியுள்ளார்.

இதன்பிறகும், புஷ்பராஜ் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு அடிக்கடி பணம் கேட்டுள்ளார். இது குறித்து பவானி, தனது உறவினரான பட்டாபிராம், கக்கன்ஜி நகரைச் சார்ந்த டேவிட் என்பவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு டேவிட், புஷ்பராஜிக்கு போன் செய்து நெமிலிச்சேரி, 400 அடி சாலை உள்ள டீக்கடைக்கு வந்து பேசுமாறு வரழைத்துள்ளார். டீக்கடைக்கு வந்ததும், அவரும் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து புஷ்பராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேவிட் மற்றும் நண்பர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள். இதன்பிறகு அக்கம் பக்கத்தினர் டேவிட்டை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின்படி திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட் உள்ளிட்ட நண்பர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: