×

ஆம்புலன்ஸ் வர 6 மணி நேரம் தாமதம் கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை உறவினர்களே அடக்கம் செய்ய முயற்சி: அதிகாரிகளை கண்டித்து மறியல்; மணலி புதுநகரில் பரபரப்பு

திருவொற்றியூர்: மணலி புதுநகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (62). இவரது மனைவி தேவிகா. தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். தேவிகாவுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதால், மணலி புதுநகரில் உள்ள மாநகராட்சி சுகாதார மருத்துவமனைக்கு சங்கரலிங்கம் அழைத்து சென்றார். அங்கு, கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, மாத்திரையை கொடுத்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சங்கரலிங்கத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்தார். இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று பகல் 11 மணிக்கு சங்கரலிங்கத்தின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆனால், சங்கரலிங்கம் இறந்த விஷயம் தெரியாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர்.

அப்போது, அவர் இறந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அங்கிருந்த அவரது உறவினர்களிடம், ‘‘சங்கரலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, அவர் உடலை நீங்கள் அடக்கம் செய்யக்கூடாது. நாங்கள் தான் அடக்கம் செய்வோம். ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது,’’ என்றனர். ஆனால், மாலை 5 மணி ஆகியும் சங்கரலிங்கத்தின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகும் ஆம்புலன்ஸ் வராததால், உறவினர்கள் வேறுவழியில்லாமல் அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே உடலை அடக்கம் செய்வதற்காக அருகிலுள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, அங்கு மாநகராட்சியின் ஆம்புலன்ஸ் வேகமாக வந்தது. அதில் வந்த அதிகாரிகள் சங்கரலிங்கத்தின் உடலை அடக்கம் செய்யவிடாமல் ஆம்புலன்சில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : relatives ,Manali New Town , Ambulance, 6 hour delay, corona, corpse of deceased, burial of relatives, attempt
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...