×

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 300 கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது: 10ம் தேதி பரிசோதனை தொடக்கம்

சென்னை: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 300 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி நேற்று சென்னை வந்துள்ளது. இந்த தடுப்பூசி சிலருக்கு செலுத்தி பரிசோதனை செய்ய சென்னையில் உள்ள இரண்டு மையங்கள் தேர்வாகி உள்ளது. இது வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. உலகத்தை முடக்கி போட்டுள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. கடந்த மாதம், கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றது. இதையடுத்து, சீரம் நிறுவனத்திற்கு மனிதர்களிடம் 2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் பரிசோதனை ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 17 நகரங்களிலும் இந்த தடுப்பு மருந்து சோதனை நடைபெறுகிறது. இந்தியாவில் சுமார் 1,600 பேரிடம் சோதனை நடத்தப்படவுள்ளது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமசந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சோதனை தடுப்பூசி பரிசோதனை நடைபெறவுள்ளது. இதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வ விநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மருத்துவமனையில் 100 முதல் 120 பேர் என்ற அடிப்படையில் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரியின் சமூக மருத்துவ துறை மருத்துவர்கள் இதற்கு கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பரிசோதனைக்கு தேவையான 300 தடுப்பூசிகள் நேற்று சென்னை வந்து சேர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10ம் தேதி இந்த பரிசோதனை தொடங்கப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 மற்றும் 24 வது நாட்கள் இவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான சோதனை நடத்தப்படும்.


Tags : Govshield ,Chennai ,Oxford University , Oxford University, 300 Govshield vaccine, arrived in Chennai, test start on 10th
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...