திருச்சி தொழிலதிபரிடம் ரூ.3.85 கோடி மோசடி சென்னை அட்வென்ட் சர்ச் பிஷப் கைது

திருச்சி: திருச்சி தொழிலதிபரிடம் ரூ.3.85 கோடி மோசடி வழக்கில் சென்னை அட்வென்ட் சர்ச் பிஷப் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அட்வென்ட் சர்ச் இயங்கி வருகிறது. இதற்கு சொந்தமாக ஏராளமான பள்ளிகள் மற்றும் சர்ச்கள் இயங்கி வருகிறது. இதில் சென்னை மாவட்ட பிஷப்பாக எஸ்.டி.டேவிட் உள்ளார். இவரின் நிர்வாகத்தின்கீழ் 100 சர்ச், 50 பள்ளிகள் உள்ளன. மேலும் திருப்போரூர், சிட்லப்பாக்கம் பகுதிகளில் உள்ள அட்வென்ட் பள்ளிகளுக்கு தாளாளராகவும் உள்ளார். இந்த அட்வென்ட் சர்ச்சுக்கு சொந்தமான இடம், வேளச்சேரியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி. இந்த  இடத்தில் புதிதாக பள்ளி கட்ட திருச்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் டேவிட்டிடம் ரூ.26 கோடிக்கு விலை பேசி, முன் பணமாக கடந்தாண்டு பல்வேறு கட்டங்களாக வங்கியில் ரூ.3.85 கோடியை கொடுத்துள்ளார். இந்த பணத்தை சர்ச்சுக்கான வங்கி கணக்கில் போடாமல் டேவிட் எடுத்துக்கொண்டுள்ளார். இடத்தை சத்தியமூர்த்திக்கு கொடுக்கவில்லை.

இந்நிலையில் டேவிட்டின் பிஷப் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது. தற்போது, பணி நீட்டிப்பில் இருந்து வருகிறார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் ரூ.3.85 கோடி மோசடி செய்தது தொடர்பாக திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். இதையடுத்து சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டுக்கு திருச்சி நகர போலீசார் நேற்று முன்தினம் சென்று டேவிட்டை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘ரூ.3.85 கோடி மோசடி புகாரில் பிஷப் கைது செய்யப்பட்டார். இதில் உடந்தையாக இருந்த சர்ச் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஸ்டீபன்சன், புரோக்கர் நெல்லை சாமுவேல் ஆகிய 3 பேரை தேடி வருகிறோம்’ என்றனர். பின்னர் பிஷப் டேவிட்டுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: