சீனாவின் பப்ஜி உள்பட 118ஆப்களுக்கு தடை: பெற்றோர், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

சென்னை: சீனாவின் பப்ஜி வீடியோ கேம் உள்பட 118 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு பெற்றோர், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரித்துள்ளனர். இந்திய எல்லை பகுதியை சீன ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்த நிலையில், இந்திய அரசு சீனா நாட்டை சேர்ந்த 106 செல்போன் ஆப்களுக்கு கடந்த இரண்டு மாதத்துக்கு முன் தடை விதித்தது. இந்த நிலையில், கடந்த 29 மற்றும் 30ம் தேதி சீன ராணுவ வீரர்கள் லடாக்கின் பாங்காங்க் திசோ ஏரி பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசு சீனாவின் பப்ஜி உள்பட 118 மொபைல் ஆப்களுக்கு நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது.

இது தொடர்பாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பப்ஜி கேம் உள்பட 118 ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. இந்த ஆப்கள் அனைத்தும் சீன நாட்டில் உள்ள நிறுவனங்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் பப்ஜி மொபைல் ஆப்புக்கு தடை விதித்துள்ளதை பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “தற்போது குழந்தைகள் செல்போன்கள் மீது அதிக ஆர்வமாக உள்ளனர். அவர்களிடம் செல்போன்களை கொடுக்காமலும் இருக்க முடியவில்லை. செல்போன்களில் புதிய புதிய வீடியோ கேம்கள் வருகின்றன. இதில் பப்ஜி கேம் மிகவும் ஆபத்தானது.

இந்த விளையாட்டு மீது குழந்தைகள் பலரும் ஆர்வமாக உள்ளனர். இதை விளையாடும்போது, அந்த விளையாட்டுக்கு குழந்தைகள் அடிமையாகி விடுகின்றனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி, பல மாணவர்கள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர். இதனால் பல வருடங்களாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். அதற்கு இப்போதுதான் பலன் கிடைத்துள்ளது. இந்த விளையாட்டுகளை தடை விதித்ததன் மூலம் இளைஞர்கள் எதிர்காலம் காப்பாற்றப்படும். மேலும் இதுபோன்று ஆபத்தான வீடியோ கேம்களுக்கு தொடர்ந்து தடை விதிக்க வேண்டும்” என்றனர்.

Related Stories:

>