×

ஹேக்கர்கள் ஊடுருவல் மோடி டிவிட்டர் முடக்கம்: நன்கொடை அளிக்கும்படி பதிவுகள்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவி, பிட்காயினை நன்கொடையாக அளிக்கும்படி பதிவுகள் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் ஆர்வம் உள்ளவர். குறிப்பாக, டிவிட்டரில் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருடைய பெயரில் ஒரு டிவிட்டர் கணக்கையும், நரேந்திரமோடி.இன் என்ற இணையதளத்துக்காக அதே பெயரில் மற்றொரு டிவிட்டர் கணக்கையும் கையாண்டு வருகிறார். இது தவிர, பிரதமர் அலுவலகத்துக்கான தனி டிவிட்டர் கணக்கும் ‘பிஎம்ஓஇந்தியா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் நரேந்திரமோடி. இன் என்ற கணக்கை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த கணக்கில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஹேக்கர்கள் ஊடுருவினர்.

கொரோனாவுக்கான நிதியை கிரிப்டோ கரன்சி என்கிற பிட்காயின்களாக வழங்குமாறு தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டுள்ளதுடன், அதற்கான லிங்கினையும் பதிவிட்டுள்ளனர். இந்த விவகாரம், டிவிட்டர் நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, உடனடியாக நன்கொடை பதிவுகள் நீக்கப்பட்டு, மோடியின் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. இது பற்றி டிவிட்டர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், ‘மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பற்றி ஆராய்ந்து வருகிறோம். ஹேக் செய்த நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் எங்களின் குழு ஈடுபட்டுள்ளது. டிவிட்டர் பயனாளர்கள் தங்கள் கணக்கை விழிப்புணர்வுடன் கையாளுமாறு கேட்டுக் கொள்கிறோம்,’ என்று கூறியுள்ளார்.

விவிஐபிகளுக்குக் குறி
* இதுவரை 130 விவிஐபி.களின் டிவிட்டர் கணக்குகளில் ஊடுருவல் நடந்துள்ளது. ஹேக் செய்த கணக்குகளில் 45 பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 7 கணக்குகளில் இருந்த தகவல்களையும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
* கடந்த ஜூலை 15ம் தேதியன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர்  ஒபாமா, அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோசஸ் ஆகியோரின் டிவிட்டர்களில் ஊடுருவல் நடந்தது.
* ஜான் விக் என்பவரின் ஹேக்கர்கள் குழு இதுபோல் பிரபலங்களின் கணக்கில் ஊடுருவி, பிட் காயின் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

* பேஸ்புக்கை பயன்படுத்த பாஜ எம்எல்ஏ.வுக்கு தடை
‘பாஜ தலைவர்களின் வன்முறை, வெறுப்புப் பேச்சை பரப்புவதற்கு இந்திய பேஸ்புக் நிர்வாகம் உதவி செய்கிறது,’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கும் கடிதம் எழுதியது. இதன் எதிரொலியாக, சர்ச்சைக்குரிய தெலங்கானா பாஜ எம்எல்ஏ ராஜா சிங்கின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிர்வாகம் நேற்று அதிரடியாக முடக்கியது. அவர் இந்த தளங்களை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

Tags : Hackers ,Modi , Hackers Infiltration, Modi Twitter, Freeze, Donate, Donate Posts
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...