×

ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக இந்தியா சூப்பர் கூட்டணி: எல்லை சண்டையை அடுத்து வர்த்தக கிடுக்கிப்பிடி ஆரம்பம்

புதுடெல்லி: சீன வர்த்தக ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்காவை தொடர்ந்து ஆசியாவில் இந்தியா கூட்டணி அமைக்க தயாராகி விட்டது. ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக வர்த்தக போரை ஆரம்பிக்க ஆயத்தமாகி விட்டது. அமெரிக்காவில் துவங்கி, இந்தியா வரை பெரும்பாலான நாடுகளுக்கு சாதாரண குண்டூசி முதல் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரை தயாரித்து சப்ளை செய்து வருவது சீனா தான். பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எல்லையில் தொடர்ந்து வாலாட்டுவதுடன், தெற்காசியாவில் அச்சுறுத்தலாக இருந்து வரும் சீனாவுக்கு பாடம் புகட்ட இந்தியா மட்டுமின்றி, ஆசிய நாடுகள் தயாராகி விட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சீனா தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருகிறது. இதனால் மூன்று நாடுகளும் சேர்ந்து கூட்டாக சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளன.

சீனாவுக்கு பாடம் புகட்ட அதன் வர்த்தகத்தை நம்பாமல் தங்களுக்குள் சுயமாக வர்த்தக பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன. சமீபத்தில் டெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்ஹாம், ஜப்பான் வர்த்தக அமைச்சர் ஹிரோஷி கஜியாமா ஆகியோர் கூட்டாக பேசினர். தெற்கு சீன கடல் பகுதியில் தொடர்ந்து சீனா தொல்லை தருவதால் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடும் எரிச்சல் அடைந்து வருகின்றன. இதுபோல, எல்லையில் இந்தியாவை தொடர்ந்து சீண்டி வருவதால் எரிச்சல் அடைந்து வருகிறது. இதை போக்கி சீனாவை பணிய வைக்க, அதன் ஆதிக்கத்தை குறைக்க வர்த்தகத்தை குறைத்து கொள்வது தான் ஒரே வழி என்று முடிவு செய்துள்ளனர்.

சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் வர்த்தகத்தை குறைத்து கொள்வது முதல் கட்டம்; அங்குள்ள இந்திய முதலீட்டு நிறுவனங்களை விலக்கி கொள்வது குறித்து தீவிரமாக  முடிவெடுக்க இந்த மூன்று நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக இந்தொ பசிபிக் மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே வர்த்தக பொருட்களை பரிமாற்றம் செய்வது குறித்து திடமான ஒப்பந்தம் போட வேண்டும்; சீனாவை அண்டியிருக்காமல் எதிர்காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி கொள்ள வேண்டும்; அதற்கு பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சீனாவுக்கு எதிரான இந்த கூட்டணியில் மேலும் புதிதாக சில ஆசிய நாடுகள் சேரும் என்று இந்த மூன்று நாட்டு அமைச்சர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். அடுத்த கூட்டத்தை விரைவில் கூட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

என்ன நடக்கபோகிறது?
* சீனாவில் முதலீடு செய்து இயங்கிவரும் தங்கள் நாட்டு நிறுவனங்களை திரும்ப அழைக்க அமெரிக்கா உட்பட பல நாடுகளும் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் அடுத்த 3 ஆண்டில் 260 நிறுவனங்கள் வெளியேற உள்ளன.
* அமெரிக்க கம்பெனிகள் வௌியேற முடிவு செய்து விட்டன. எனினும், நவம்பரில் அதிபர் தேர்தல் முடிவை அடுத்து தான் இந்த நிறுவனங்கள் இறுதி  முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
* சீனாவில் இருந்து இந்தியாவுக்கு தொலைதொடர்பு சாதனங்களை சப்ளை செய்யும் 26 முக்கிய நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலேயே நிறுவனத்தை துவங்க உள்ளன.

Tags : China ,India Super Coalition ,Trade tightening ,border war ,Japan ,Australia ,India , Japan, Australia, together, against China, India super alliance, border fights, trade grips start
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...