வர்த்தக வாய்ப்புகளை தட்டிப்பறித்தது குட்டி நாடு சீன எதிர்ப்பு நிறுவனங்களை ஈர்த்த வியட்நாம்: கொரோனாவிலும் சவால் விடும் வளர்ச்சி; மொத்தமாக ‘கோட்டை விட்டது’ இந்தியா

சென்னை: கொரோனாவை தொடர்ந்து, சீனாவில் இயங்கி வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற தயாராக வருகின்றன. இந்த வாய்ப்பு இந்தியாவுக்குதான் கிடைக்கும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. மாறாக, வியட்நாம்தான் தட்டிப்பறிக்க போகிறது என்கின்றனர் வல்லுநர்கள். அந்த அளவுக்கு, குட்டிநாடாக இருந்தாலும் இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் அதன் வளர்ச்சி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டுக்கு 5% தான். ஆனால், வியட்நாமின் வளர்ச்சி 18%. இதே காலக்கட்டத்தில் வியட்நாமின் வர்த்தக உபரி 4,700 கோடி டாலர். ஆனால் இந்தியா 1300 கோடி வர்த்தக பற்றாக்குறை வைத்துள்ளது. 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், வியட்நாம் வர்த்தக உபரியை கொண்டிருந்தாலும், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 15,600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலும் வளர்ச்சி: கொரோனாவில் இந்தியா உட்பட எல்லா நாடுகளும் பெரும் தள்ளாட்டத்தை சந்தித்தன. ஆனால், வியட்நாம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் 1,830 கோடி டாலராக இருந்த வியட்நாமின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 2,260 கோடி டாலராக இருந்துள்ளது. பிப்ரவரியில் (2,080 கோடி டாலர்), மார்ச் (2.420 கோடி டாலர்), ஏப்ரலில் (1,760 கோடி டாலர், மே (1,940 கோடி டாலர்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2010ல் வியட்நாமின் ஏற்றுமதி 7,220 கோடி டாலராகவும், இந்தியாவின் ஏற்றுமதி 22,040 கோடி டாலராகவும் இருந்தது. 2019ல் வியட்நாம் 31,830 கோடி டாலருக்கும், இந்தியா 32,330 கோடி டாலருக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. அதாவது, இந்தியாவுக்கு இணையான வளர்ச்சியை அடைந்துள்ளது.

தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலை, வியட்நாமில்தான் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் வியட்நாம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம் வியட்நாமில் இந்த நாடுகள் முதலீடு செய்யவும், அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வழி வகுத்துள்ளது. கடந்த 2009ம் மற்றும் 2018ம் ஆண்டுகளிடையே ஒப்பிடுகையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 1.6 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், வியட்நாமின் ஏற்றுமதி 4.4 மடங்கு அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் தொழில் தொடங்குவதை ஈர்க்க எத்தனையோ மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடைசியாக மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா வரை வந்து விட்டது இந்தியா. ஆனாலும், சீனாவுக்கு எதிரான வர்த்தக போர் உச்சத்துக்கு சென்றபோதே, வரிசசலுகைகளை அள்ளி வீசி முதலீடுகளை வியட்நாம் ஈர்த்து விட்டது. சீன எதிர்ப்பு நிலைப்பாட்டால் சீனாவில் இருந்து 56 நிறுவனங்கள் வெளியேறி விட்டன. இதில் 8 நிறுவனங்கள்தான் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன ஆனால் 26 நாடுகள் வியட்நாமுக்கு மாறி விட்டன. கொரானா பரவல் இருந்தும், ஜனவரி முதல் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்நாமில் இருந்து ஏற்றுமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி 24% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவில் வரி போட்டு கொல்றாங்க

நிறுவனங்களை ஈர்க்க வியட்நாம் வரிச்சலுகைகளை அள்ளி வீசியது. ஆனால், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி அதிகபட்சமாக 43 சதவீதமாக உள்ளது. ஆனால், நிறுவனங்கள் வியட்நாமுக்கு ஈர்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

* ஹைடெக் ஏற்று மதியில் அசத்தும் வியட்நாம்

வியட்நாமுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஏற்றுமதி மினரல் எரிபொருட்கள் (14%), முத்து (11%), ஆர்கானிக் கெமிக்கல் (5%), மற்றும் வாகனங்கள் (5%) என அதிகம் உள்ளது. ஆனால், அதிக தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி துறைகளில் வியட்நாம்தான் டாப். அதாவது, 2018ல் வியட்நாம் ஏற்றுமதி 40%. ஆனால், இந்தியா வெறும் 9%தான்.

* எல்லாவற்றிலும் டாப் பங்களிப்பு

கடந்த 2019ல் வியட்நாமின் ஏற்றுமதி பங்களிப்பு மின்சார கருவி, சாதனங்கள் (41% பங்களிப்பு), ஆடைகள் (11%), காலணி (8%), இயந்திரங்கள் (5%). அதாவது, 10 ஆண்கைங் வியட்நாமின் மொத்த ஏற்றுமதி 10 சதவீதத்தில் இருந்து  42% ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக மொபைல் ஏற்றுமதி 10%, எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டு 7%, மொபைல் உதிரி பாகங்கள் 6% என உள்ளது. இதன் மொபைல் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரியா ஆகியவை 40% பங்களிப்பில் உள்ளன.

Related Stories: