×

வங்கி கடன் தவணை சலுகைக்கு வட்டிக்கு மேல் வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: ‘கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்ட தவணை சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு மேல் வட்டி விதிப்பதை கைவிடவும் முடியாது; அதை தள்ளுபடி செய்யவும் முடியாது,’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதனால், வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்கள் வாங்கியுள்ள கடன் தொகைக்கான மாதாந்திர தவணையை செலுத்துவதில், மத்திய அரசு சலுகை அளித்தது. இது, கடந்த மார்ச் முதல் தற்போது வரையில் அமலில் உள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி, தவணையை செலுத்தாத கோடிக்கணக்கான மக்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சலுகையை பயன்படுத்திய காலத்துக்கும் கணக்கு போட்டு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கூட அவகாசம் வழங்க முடியும்,’ என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நீதிமன்றத்தில் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, ‘வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஒரு தனியார் ஏஜென்ட் போன்று செயல்படுகிறது. இந்த வட்டிக்கு வட்டி பிரச்னையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கிக்கு ஆதரவாக செயல்படுகிறது,’ என மனுதாரர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிடும்போது, “நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பாக வங்கிகள் இருக்கின்றன. அவற்றை பாதிப்படையவோ அல்லது வலுவிழக்கவோ செய்யக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் கண்டிப்பாக எடுக்க முடியாது. அதனால், தவணையை செலுத்தும் சலுகையை பெற்றவர்களிடம் இருந்து வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது. அதனை தள்ளுபடி செய்யவும் முடியாது.

இருப்பினும், இந்த தவணை சலுகையை பெற்றவர்கள் யாரும், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். மேலும், தவணையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தமும் குறைக்கப்படும்,’’ என்றார். அவர் தனது வாதத்தில் மேலும், ‘‘இந்த கடன் விவகாரத்தில் வரும் 6ம் தேதி நிபுணர்கள் குழு, துறைரீதியான சில வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர உள்ளனர். கொரோனா பிரச்னையால் நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் அழுத்தத்தில்தான் உள்ளன. அதற்காக அனைத்தையும் அப்படியே விட்டுவிட முடியாது. அவ்வாறு செய்தால் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாகி விடும்,’’ என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் முடிவுகளை நாங்கள் ஏற்கனவே அறிந்து கொண்டு விட்டோம். கொரோனா காரணமாக நாட்டின் எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக நீங்களே (மத்திய அரசு, ரிசர்வ் வங்கி) தெரிவித்து வருகிறீர்கள். ஆனால், அவற்றை சரி செய்ய என்ன செய்தீர்கள் என்று கேட்டால், பதில் சொல்ல மறுக்கிறீர்கள். நீங்கள் கூறும் காரணங்கள் பொருத்தமானதா என்பதை நாங்கள் ஆய்வு செய்து பார்க்க விரும்பவில்லை. ஆனால், இந்த வழக்கில் பொதுமக்கள் நலனுக்காக மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.

தற்போது, வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கு வழங்கப்படும் கால அவகாசம் என்பது முக்கிய பிரச்னை கிடையாது. அவ்வாறு சலுகை கொடுக்கப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படுவது பற்றிதான் இந்த வாதம் உள்ளது. கடன் செலுத்த அவகாசமும் அளித்து விட்டு, அதற்கு வட்டிக்கு வட்டியும் போடுவது எந்த விதத்தில் நியாயம்?  இது குறித்து ரிசர்வ் வங்கி கண்டிப்பாக விளக்கமாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பின்னர், விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* கடன் செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கக் கூடாது
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும், ‘‘இந்த வழக்கில் இறுதி உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் வரையில், கடந்த 6 மாதமாக அதாவது மார்ச் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை, கடன் செலுத்தாதவர்களின் பட்டியலில் சேர்க்கக் கூடாது என மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிடுகிறோம்,’’ என்று தெரிவித்தனர்.

* நீதிபதிகள் கேட்ட 3 கேள்விகள்
மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் வாதங்களை கேட்ட பிறகு, நீதிபதிகள் கேட்ட 3 கேள்விகள் வருமாறு:
1 வட்டிக்கு வட்டி வசூல் செய்வது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
2 வட்டிக்கு வட்டி போடுவதை கைவிட, பேரிடர் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
3 அவ்வாறு செய்ய உங்களால் முடியுமா? முடியாதா?

Tags : Federal Government Scheme ,Supreme Court , Bank loan, installment offer, interest on interest, discount, Supreme Court, Federal Government, Plan
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...