முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிப்பு: மருத்துவர்கள் சங்கம் கண்டனம்...!!

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாமல் , தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை மீறப்பட்டுள்ளது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்ததாவது: முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழக அரசு நடத்தும்  கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையில் அரசு கட்டுபாட்டு இடங்களுக்கு, இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு தமிழக அரசு நடத்தவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக ,இது திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக ,முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளான ஆகஸ்ட் 31ம் தேதி, கல்லூரி நிர்வாகங்களே 100-க்கும் மேற்பட்ட இடங்களை நேரடியாக நிரப்பிக் கொண்டன. இதனால்  அதிக மதிப்பெண் பெற்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இது தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிரானது.

இதனையடுத்து, மருத்து மாணவர் சேர்க்கையில் நடைபெறும் இத்தகைய முறைகேட்டை தடுத்திட, தனியார் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் இடங்கள் அனைத்திற்கும் மாநில மற்றும் மத்திய அரசுகளே `மாப்அப்’ என்னும் இறுதிக் கட்ட கலந்தாய்வை  நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அதுவே முறைகேடுகளுக்கும், கட்டாய நன்கொடை வசூலுக்கும் முடிவு கட்டும். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும்.

மேலும், மாணவர் சேர்க்கையின் இறுதி நாளான ஆகஸ்ட் 31ம் தேதி அன்று, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. அது முறைகேடுகளுக்கும், கட்டாய நன்கொடை வசூலுக்கும் வழிவகுக்கிறது.

எனவே, எந்தக் காரணம் கொண்டும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர்களை நேரடியாக சேர்த்துக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories:

>