×

கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள்...: புனேவில் இருந்து பரிசோதனைக்காக சென்னை வருகை!

சென்னை: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் புனேவில் இருந்து பரிசோதனைக்காக சென்னை வந்தடைந்துள்ளது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கே இன்று பெரிய சவாலாக உள்ள கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள தடுப்பூசியை, கோவிஷீல்டு எனற பெயரில் இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமத்தை புனேவில் உள்ள புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்டிடியுட் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை பெருமளவு உற்பத்தி செய்வதற்கு முன் அதனை மனித உடம்பில் செலுத்தி பரிசோதிக்கும் ஹூமன் ட்ரையல் எனும் பரிசோதனை தற்போது மூன்றாம்கட்டத்தை எட்டியுள்ளது.

தடுப்பு மருந்து பரிசோதனையில் இறுதிகட்டமான இந்த நிலை பணிகளை மேற்கொள்ள வசதியாக, 200 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் புனேவில் இருந்து இன்று சென்னை வந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனையை மேற்கொள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருந்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 150 பேருக்கும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் 150 பேருக்கும் இம்மருந்துகள் கொடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற இருக்கின்றன. நாடு முழுவதும் 1600 பேரிடம் பரிசோதனை நடைபெறும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Chennai ,Pune , Corona, Covshield, Vaccine, Pune, Test, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...