×

2019ஆம் ஆண்டில் 42,480 விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தற்கொலை: என்சிஆர்பி ஆய்வில் தகவல்

டெல்லி: கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் 42,480 விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 32,563 பேர் கூலித் தொழிலாளர்கள், 10,281 பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் கூலித் தொழிலாளர்கள் மட்டும் 23 சதவீதமாகும். கடந்த 2018ஆம் ஆண்டில் 30,132 பேர் தற்கொலை செய்த நிலையில் 2019ஆம் ஆண்டில் அதைவிட அதிகரித்துள்ளது.

10,281 விவசாயிகளில் 5,957 பேர் விவசாயிகள், 4,324 பேர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலையில் (1,39,123) விவசாயிகள் தற்கொலை மட்டும் 7.4 சதவீதமாகும். கடந்த 2018-ம் ஆண்டில் 10,389 பேர் தற்கொலை செய்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டில் சற்று குறைந்துள்ளது. வேளாண் தொழில் செய்து வந்தவர்கள், விவசாயிகள் என 5,957 பேர் தற்கொலை செய்ததில், 5,563 பேர் ஆண்கள், 394 பேர் பெண்கள். 4,324 வேளாண் கூலித் தொழிலாளர்கள் தற்கொலையில் 3,749 பேர் ஆண்கள், 575 பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39.2 சதவீதம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. அடுத்ததாக, கர்நாடகாவில் 19.4 சதவீதம், ஆந்திராவில் 10 சதவீதம், மத்தியப் பிரதேசம் 5.3 சதவீதம், சத்தீஸ்கர் தெலங்கானாவில் 4.9 சதவீதம் தற்கொலைகள் நடந்துள்ளன.

தற்கொலை செய்துகொண்ட பிரிவுகளில் ஆய்வு செய்தால், தினக்கூலித் தொழிலாளர்கள்தான் 23.4 சதவீதம் பேர். அதைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள பெண்கள் தற்கொலை செய்துகொண்டது 15.4 சதவீதமாகும். இது தவிர சுயதொழில் செய்வோர் 11.6 சதவீதம், வேலையில்லாதவர்கள் 10.1 சதவீதம், ஊதியம் பெறுவோர் 9.1 சதவீதம், மாணவர்கள் மற்றும் வேளாண் துறையில் இருப்போர் தலா 7.4 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஒட்டுமொத்த தற்கொலையில் 12.6 சதவீதம் அதாவது 17,588 பேர் கல்வி பயின்றவர்கள். 3.7 சதவீதம் அதாவது 5,185 பேர் பட்டம் பெற்றவர்கள் என்று என்சிஆர்பி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : mercenaries ,NCRP ,suicide , Farmers, suicide
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை...