×

இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: ஆந்திர அரசு அதிரடி

அமராவதி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாத நிலையில், அவர்களை குறி வைத்து ஆன்லைன் சூதாட்டதளங்கள் படையெடுத்து வருகின்றன. இதுதொடர்பான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களில் பெரும்பாலான அளவு வந்து கொண்டிருக்கின்றன.

பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர். இதற்குப் பல இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.   இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்குப் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்‍கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியின் தலைமையில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தொடர்புத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா, ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறது. அதனால், இணையத்தில் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை தடை செய்ய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்படும் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு முதல் தடவை அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாம் முறை விளையாடினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.



Tags : Andhra Pradesh ,govt , Youth, Online Gambling, Ban, Andhra, Cabinet
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...