×

கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது?: அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...!!

சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.  

அதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், வருமானம், பாரம்பரிய நடைமுறை பற்றிய அவர்களின் ஞானம்,  கோவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கிறாரா, இல்லையா? அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா? என்பது உள்ளிட்ட விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிடவேண்டும் என்றும், கோவில் அலுவலகங்களில் பக்தர்களின் பார்வைக்கு இந்த விவரங்களை அறிவிப்பு பலகையாக வைக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கூறிய விவரங்கள் தொடர்பாக  அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்ப்டடது. அப்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது?  பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது? நிர்வாகிகளின் விவரங்களை கோவில் அறிவிப்பு பலகையில் ஏன் வெளியிட கூடாது? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த  வழக்கில் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு ஒத்திவைத்துள்ளது.


Tags : Chennai High Court ,Treasury ,Trusts ,Temple , Temple, Charitable Trusts, Chennai High Court, Question
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...