×

சின்னாறு பாலம் சேதமடைந்ததால் வெள்ளத்தில் நீந்தி செல்லும் மக்கள்: சீரமைக்க வலியுறுத்தல்

தர்மபுரி: பென்னாகரம் அருகே, சின்னாறு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சின்னாற்றை ஆபத்தான முறையில் மக்கள் கடந்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டிக்கு காவிரி கரையோர சாலை வழியாக செல்வதற்கு, சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஒகேனக்கல் வனப்பகுதி வழியாக  செல்லும் சின்னாற்றை கடந்து சென்றால், 35 கிலோ மீட்டரில் அஞ்செட்டிக்கு சென்று விடலாம். இதனால் இந்த குறுக்கு வழியை பெரும்பாலான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அஞ்செட்டி, பெட்டமுகிலாளம் சுற்றுவட்டார பகுதியில் விளையும் ராகி, நிலக்கடலை, துவரை, அவரை, எள், புளி, ஆமணக்கு உள்ளிட்ட விளைபொருட்களை பென்னாகரம், பாப்பாரப்பட்டி சந்தைகள் மற்றும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதற்காக, சின்னாற்றின் குறுக்கு சாலை வழியாக அஞ்செட்டிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது சின்னாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சிறுபாலம் சேதமாகி உடைந்தது. இந்த பாலத்தை உடனே சீர் செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால், தற்போது மக்கள் ஆற்றில் இறங்கி செல்கின்றனர். மழைக்காலத்தில் சின்னாற்றில் மழைநீர் கரை புரண்டு ஓடுவதால், இந்த சாலையை பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில், பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில்  கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சின்னாற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, சேதமடைந்த பாலத்தின் வழியாக அஞ்செட்டிக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘அஞ்செட்டி, பெட்டமுகிலாளம் பகுதி மக்கள் சின்னாற்றின் குறுக்கு வழிச்சாலையை அதிகம் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் ஆற்றில் ஒரு ஆள் உயரத்திற்கு மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் தண்ணீர் வரத்து குறைந்த பின்னர், ஆற்றில் டூவீலரை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சிறுபாலத்தை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும் என்றனர்.

Tags : bridge ,Chinnaru , Because ,Chinnaru , damaged, flood,alignment
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...