தற்கொலை தவிர்க்க அதன் காரணங்கள் களையப்பட வேண்டும்; களைவோமா? கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை: தேசிய அளவில் தற்கொலை எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா முழுவதும் 2019ம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டது. தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் 2019ம் ஆண்டு 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 50 சதவீத தற்கொலைகள் 5 மாநிலங்களில் நடந்துள்ளது. மாகாராஷ்டிர முதலிடத்திலும் (18,916), தமிழகம் 2ம் இடத்திலும் உள்ளது. 2019ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 12,665 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தற்கொலை அதிகம் நடக்கும் நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

2019ம் ஆண்டில் மட்டும் சென்னையில் 2461 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் உள்பட 42,480 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 சதவீதம் பேர் வீட்டில் இருக்கும் பெண்கள் என கூறியுள்ளனர். இந்திய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது, வருத்தம் தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, தற்கொலையில் தமிழகம் இரண்டாமிடமாம். மனிதன் மீது இயற்கை காட்டும்  எதிர்ப்பு மரணம்;  மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு கொலை; மனிதன் சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பு தற்கொலை. தற்கொலை தவிர்க்க அதன் காரணங்கள் களையப்பட வேண்டும்; களைவோமா?, என்று கூறியுள்ளார்.

Related Stories:

>