×

பள்ளிகள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: கொரோனா ஊரடங் கால் மார்ச் 25ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கேட்டன. இதற்கு பெற்றோர் மறுத்தனர். இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கல்விக் கட்டணம் செலுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி, கல்விக் கட்டணத்தை 25 சதவீதமாக நான்கு கட்டமாக கட்டலாம் என்று தெரிவித்தது. ஆனால் நீதிமன்றமோ, முதலில் 40 சதவீதம் பின்னர் 35 சதவீதம் மீதம் உள்ள 25 சதவீதத்தை இறுதியாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக கல்விக் கட்டணத்தை செலுத்த  வேண்டும் என்று வற்புறுத்துவதாக, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பேரில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், சென்னை உயர் நீதி மன்றத்தின் கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவை மீறி, 40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் செலுத்தக் கோரி பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும் அதையும் மீறி சில பள்ளிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்கும் பள்ளிகள் மீது புகார் தெரிவிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இணைய தள முகவரியை வெளியிட்டுள்ளனர். எனவே பெற்றோர் தங்கள் புகாரை மின்னஞ்சல் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பலாம். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வரும் புகார்களை அந்த அலுவலர்கள் விசாரிக்கும் வகையில் புகார் வந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல்களையும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : schools ,School Education Department Warning , 40 percent of schools, if overcharged, take drastic action, school education department warns
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...