×

மாமல்லபுரம் விடுதிகள், ரெஸ்டாரன்ட்டுகளில் ஒரு அறையில் 2 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: போலீசார் எச்சரிக்கை

சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், ரெஸ்டாரன்ட், பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் ஒரு அறைக்கு 2 பேர் மட்டுமே தங்குவதற்கு அறை வழங்க வேண்டும் என்ற அரசின்  உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள், ரெஸ்டாரன்ட், பண்ணை வீடுகள் அனைத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 5 மாதத்துக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு சில தளர்வுகளை அளித்து, அதை பின்பற்றி கொரோனா பரவாத வகையில் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் திறந்து கொள்ளலாம் என அறிவுறுத்தியது.

இதையடுத்து, 5 மாதங்களுக்கு பின்பு நேற்று முன்தினம் அனைத்தும் திறக்கப்பட்டன. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், பண்ணை வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்த உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது, கூட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேசுகையில், ‘ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகள் அனைத்தும் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்.

ஒரு அறையில் 2 பேர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும். யார் வந்து தங்குகிறார்களோ அவர்களது அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும். யார் யார் வந்து தங்குகிறார்களோ அவர்களின் பெயர், முகவரி மற்றும் போன் நம்பர் ஆகியவற்றை போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். குழுவாக வந்து தங்க அனுமதி இல்லை. திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது. முக்கியமாக கேளிக்கை நிகழ்ச்சி, பார் நடத்த கூடாது, நீச்சல் குளம் பயன்படுத்த கூடாது, கடலில் குளிக்க அனுமதி இல்லை. மேலும், இந்த வழிகாட்டு முறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Tags : Mamallapuram Hotels ,restaurants ,room ,hotels ,Mamallapuram , Mamallapuram Hotels, Restaurant, One Room, 2 People, Allow, Police Warning
× RELATED புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு...