×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் சுமித் நாகல்: போராடி வென்றார் மர்ரே

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சுமித் நாகல் தகுதி பெற்றார். முதல் சுற்றில் அமெரிக்காவின் பிராட்லி கிளானுடன் (30 வயது, 129வது ரேங்க்) மோதிய சுமித் நாகல் (23 வயது, 124வது ரேங்க்) 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 2 மணி, 12 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் 7 ஆண்டுகளுக்கு  பிறகு  யுஎஸ் ஓபன் போட்டியின் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை நாகல் பெற்றுள்ளார். கடைசியாக 2013ல் சோம்தேவ் தேவ்வர்மன் 2வது சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 2ம் நிலை வீரரான  டொமினிக் தீமுடன் (ஆஸ்திரியா) நாகல் இன்று மோதுகிறார். இந்த சுற்று அவருக்கு கடும் சவாலாகவே இருக்கும். கடந்த ஆண்டு யுஎஸ் ஓபனில் அறிமுகமான நாகல், முதல் சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருக்கு எதிராக முதல் செட்டை கைப்பற்றி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே 4-6, 4-6, 7-6 (7-5), 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷியோகாவை 4 மணி, 39 நிமிடம் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்கள் மெட்வதேவ் (ரஷ்யா), திமித்ரோவ் (பல்கேரியா), ரயோனிக் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சோபியா கெனின், மேடிசன் கீஸ், அனிசிமோவா, ஸ்பெயின் நட்சத்திரம் முகுருசா, அசரென்கா (பெலாரஸ்) ஆகியோர்  2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.


Tags : round ,Sumit Nagal ,fight ,US Open Tennis: Murray , In the 2nd round of the US Open Tennis, Sumit Nagal won the fight, Murray
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து